2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்த சபை சிறந்த முறையில் செயற்பட்டால் முறைப்பாடுகள் குறையும்: பொலிஸ் பொறுப்பதிகாரி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'மத்தியஸ்த சபையினரின் செயற்பாடுகள் சிறந்த முறையில் அமையுமானால் அது இந்த சமுதாயத்திற்கு அதிக நன்மைகளைத் தேடித் தரும் அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு வரும் முறைப்பாடுகளைக் குறைக்கவும் அது வழி செய்யும்.'  என்று ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக மத்தியஸ்த சபையின்  புதிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து விட்டு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் பொறுப்பதிகாரி 'மத்தியஸ்த சேவை மிகவும் பொறுப்புள்ளதும் நன்மை தரக்கூடியதுமாகும். பிணக்கில் சம்பந்தப்பட்ட இரு சாராரையும் இணங்கச் செய்து ஒரு மத்தியஸ்தத்திற்கு வரச் செய்வதால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

மத்தியஸ்தர்களாக உள்ள நீங்கள் எப்பொழுதும் நீதிமன்றத்திற்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளீர்கள் என்று அவர் தெளிவு படுத்தினார்.
பொலிஸாராகிய எமக்குக் கிடைக்கின்ற முறைப்பாடுகளுக்கு எங்களால் தீர்வு காணப்படாமல் போய் அவற்றை மத்தியஸ்த சபைகளுக்கு அனுப்பி அங்கே இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட பல பல சம்பவங்கள் இருக்கின்றன. இதனைப் பாராட்டவும் கௌவரமளிக்கவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தினமும் 20-25 முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று கூறிய அவர், காணிப்பிரச்சனை, பணப்பிரச்சினை. குடும்பப் பிரச்சினை, கைகலப்பு போன்ற பிரச்சினைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் தான் தினமும் வருகின்றன என்றும் கூறினார்.

இத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் மத்தியஸ்த சபைகளுக்கு அனுப்பி வைக்க முடியும். அங்கே இவற்றுக்கான இணக்கப்பாடுகள் கிடைக்கலாம். தமது பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களும் உள்ளார்கள்.

மத்தியஸ்த சபையின் அழைப்புக்கு தொடர்ந்து வராமல் மறுப்பவர்களுக்கு எதிராக  பிடியாணை உத்தரவைப் பெற்று அவர்களைக் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவும் பொலிஸாரால் முடியும்.

செங்கலடிப் பிரதேசத்தில் பணத்தோடு சம்பந்தப்பட்ட அதிக பிரச்சினைகள் குறித்தே பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வருகின்றன.
மக்களிடமிருந்து பணத்தைப் பெற்ற பல நபர்கள் வெளிநாடு  சென்று விட்டார்கள். இதனால் இத்தகைய பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தேங்கிக் கிடக்கின்றன என்ற விவரத்தை வெளியிட்ட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர, அதனால் பணத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.' என்றும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X