2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'வி.பு.இன் அழிவின் பின்னர் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் ஆரம்பம்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு இடையே வன்முறைகளை தோற்றுவித்து பிரித்தாளும் தந்திரங்களை கையாண்ட அரசாங்கம் விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் தற்போது முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை வெளிப்படையாகவே ஆரம்பித்துள்ளது என்பதையே கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

'பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் முஸ்லிம் இனத்தின் தனித்துவத்தையும், பாதுகாப்பையும் முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்திடம் ஈடு வைத்துள்ளன' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'முஸ்லிம் மக்கள் தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படாததன் விளைவே இன்று இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனமாக முஸ்லிம் மக்கள் வாழவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏனெனில் அன்று எவ்வாறு தமிழ் மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டதோ அதேபோன்று தான் இன்று  முஸ்லிம் மக்கள் மீதும் திட்டமிட்டு வன்முறைகள் திணிக்கப்படுகின்றன.

தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடங்கி இன்று கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் வரைக்கும் முஸ்லிம் கட்சிகள் உட்பட அனைத்து முஸ்லிம் தலைமைகளும் கையாலாகாதவர்களாகவே உள்ளனர்.

ஏனெனில் முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் முஸ்லிம் இனத்தின் தனித்துவத்தையும், பாதுகாப்பையும் அரசாங்கத்திடம் அடகு வைத்திருக்கின்றார்கள்.

என்னதான் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு வெளிப்படையாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் முஸ்லிம் தலைமைகள் பதவிகளை துறப்பதற்கோ, அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கோ மனமின்றி மௌனம் சாதித்து வருகின்றனர்.

எங்களை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய காலம் மீண்டுமொருமுறை ஏற்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும்.

அதை விடுத்து முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்பிச் சென்று மீண்டுமொறு வரலாற்றுத் தவறை செய்வார்களானால் முஸ்லிம்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை முஸ்லிம்களுக்கு ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X