2025 மே 05, திங்கட்கிழமை

எதிர்காலம் குறித்த கவலையில் புகலிடகோரிக்கையாளர்கள்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழர்களில் பலர் தமது எதிர்காலம் குறித்து கவலையுடன் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
அவுஸ்திரேலியாவிற்கான இரண்டு வார கால விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், அந்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் படகுகள் மூலம் அந்நாட்டை செனறடைந்து தற்போது புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை சந்தித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
'புகலிடக் கோரிக்கையாளர்களில் பலரும் மகிழ்வுடன் காணப்பட்டாலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் சென்றடைந்தவர்களை பொறுத்தவரை அவர்களிடையே தாம் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்ச உணர்வு இருப்பதை உணர முடிந்தது.

பாதுகாப்பு தொடர்பாக தாங்கள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்கள் மற்றும் பயம் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களில் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு தொழில் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது. என்றாலும் விசாரனை முடிந்தவர்களை பொறுத்தவரை தங்களது புகலிட கோரிக்கை தொடர்பான முடிவு எப்படி அமையுமோ? என்ற கேள்விக்குறியுடன் உள்ளனர்.

பப்புவா நியூகினியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பது என அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் புதிய முடிவு கூட புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதனை அவர்கள் முற்றாக விரும்பவில்லை. அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று வாழ விரும்பும் தங்களை பிறிதொரு நாட்டில் தங்க வைத்து பராமரிப்பது என்பது எந்த வகையிலும் நியாயமல்ல என அவர்களில் பலரும் என்னிடம் கூறினார்கள்.
 
குறிப்பாக இவர்கள் மகிழ்வுடன் காணப்பட்டாலும் அநேகமானவர்கள் தொழில் செய்ய இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் அவர்களை நன்றாக பராமரிக்கின்றது.

அந்நாட்டின் ஆளும் மற்றும் எதிர்கட்சி அரசியல் பிரமுகர்ளுடனான சந்திப்புகளில் புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மனிதாபிமான முறையில் அனுகி முடிவு காணப்பட வேண்டும்.

நிலையான நிரந்தரமான அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கும் வரை அவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கவேண்டாம் என வலியுறுத்தி கேட்டுள்ளேன்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X