2025 மே 05, திங்கட்கிழமை

கல்வி என்ற பெயரில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்துகின்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் செயலாளர் பொ.உதயரூபன் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமான இவர் அண்மையில் கல்குடா வலய கல்வி அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டமொன்றை தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அவரது கட்சியின் செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட கட்சி உறுப்பினர்களைப் பங்குபற்றச் செய்திருந்தார்.

இது  கண்டிக்கத்தக்கது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் செயலாளர் பொ.உதயரூபன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கல்குடா வலய கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும்.

இந்த கல்வி வலயத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பகுப்பாய்வு ஒன்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசிலயமைப்பின் படி ஜனநாயக நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு பொறுப்புக் கூறுலுக்குக் கடமைப்பட்டவர்கள் அல்ல.

பொதுமக்களின் வரியினை சம்பளமாகப் பெறும் அதிகாரிகள் மக்களுக்கே வகை சொல்லலுக்கு கடமைப்பட்டவர்களாவர். இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர், அசிரியர்கள் சில அரசியல் கட்சி உறுப்பினர்களால் அச்சுறுத்தப்படுவதும், நியாயமான கடமைகளை மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்படுவதும், பழிவாங்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

சில பாடசாலை வைபவங்களுக்கு கட்சி உறுப்பினர்களை அழைத்துச் செல்வதும்  பிரதம அதிதிகளாக கலந்துகொள்வதும் ஜனநாயக பண்புகளுக்கும் மக்களாட்சியின் நல்லாட்சிக்கும் முரணானதாகும்.

இவ்வாறான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் செயற்பாடாகவே கருத முடிகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை தயங்காது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X