2025 மே 05, திங்கட்கிழமை

இனவாத செயற்பாடுகளைக் கண்டிப்பதாக சம்மேளனம் அறிவிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனவாத செயற்பாடுகளைக் கண்டிப்பதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்க்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.எம்.ஹாலித் மற்றும் அதன் செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம்.றமீஸ் ஜமாலி ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ளனர்.இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கை இன முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்லின மக்கள் சகோதர வாஞ்சையோடு இணைந்து வாழ்கின்ற அழகிய நாடு என்பது வரலாறு. அந்த வரலாற்றின் நீண்ட கால அடையாளங்கள் படிப்படியாக அருகி முற்றாகத் தேய்ந்து போவதை ஆய்வாளர்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றன. பெரும்பான்மை சமூகத்தின் கடும் போக்காளர்கள் பௌத்த துரவிகளின் வழிகாட்டுதலில் ஹலால் விவகாரத்தில் கைவைத்து அதனை நடைமுறைப்படுத்த விடாது தடைசெய்தனர்.

முஸ்லிம் பெண்களின் பர்தாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து கேவலமான பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர். மாடு அறுப்பதை  கண்டித்து இறைச்சி கடைகளை தாக்கியதுடன் தீயிட்டனர்.எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்களது பள்ளிவாயல்களுக்கு எதிராகப் போர்கொடி தூக்கி பல பள்ளிவாயல்களைத் தாக்கியுள்ளனர்.

தம்பள்ளை தொடக்கம் கிரான்ட்பாஸ் வரையிலான பள்ளிவாயல்களை படு மோசமாகத் தாக்கியுள்ளனர். சிலபள்ளிவாயல்களை மூடச் செய்துள்ளனர்.புனித ரமழான் மாதத்தில் அப்பள்ளிவாயல்களில் ஜும்ஆ தொழுகைகளும் ஏனைய வழிபாடுகளும் இடம்பெறாததுதடுத்து முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி விட்டனர்.

இது குறித்து இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல சகல இனத்தவர்களுமே மிகுந்த வேதனைப்படுகின்றனர். சகல சமூகத்தவர் மத்தியிலும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் பல்லாண்டு காலம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இத்தகைய கொடூரமான செயற்பாடுகளை மிக வன்மையா கக்கண்டிக்கிறது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சி மேற்கொள்ளப் பட்டபோது, முஸ்லிம் தலைவர்களும் உலமாக்களும் ஜெனீவா வரை சென்று இந்த நாட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க தூண்டுதல் செய்தனர்.

இது முழு உலகமும் அறிந்த பேருண்மையாகும். இவ்வளவு தூரம் தாய் நாட்டுக்காக துணிவுடன் செயற்பட்டு நெருக்கடியான கால கட்டங்களில் இந்நாட்டுக்கு உதவி செய்த முஸ்லிம் சமூகம், இன்று பெரும்பான்மை சமூகத்து மதவாதிகளால் இம்சிக்கப்படுவதை எங்களால் சகிக்க முடியவில்லை.

இது குறித்து முழுக்க முழுக்க முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடி மக்கள் சார்பில் எமது சம்மேளனம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது. நாட்டுப் பற்றானது முஸ்லிம்களின் சமய நம்பிக்கையுடன் தொடர்புடையது. ஒவ்வொரு முஸ்லிமும் தான் வாழும் நாட்டின் மீது பற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் பெரிதும் விரும்புகின்றது.

இதனால் தான் முஸ்லிம்கள் இலங்கைக்கு எதிராக ஒருபோதும் செயற்படு வதில்லை.முஸ்லிம் வர்த்தகர்கள் இலங்கையின் பொருளதார விருத்திக்கு பாரிய பங்களிப்புச் செய்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல் தலைவர்களும் இந்நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் கடும்போக்கு மதவாதிகள் தெளிவாகத் தெரிந்திருந்தும் இவ்வளவு கொடூரமாக முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களைத் தாக்குவது ஏன் என்று புரியவில்லை. இந்த கடும் போக்காளர்களின் கண்மூடித்தனமான வன்முறைப்போக்கு, முஸ்லிம்களை மாத்திரமல்லாது ஏனைய சமூகத்தாரையும் பாதித்துள்ளது கண்டு நாங்கள் மிக மிக வேதனைப்படுகின்றோம்.

இந்துக்களினதும் கிறிஸ்தவர்களினதும் வழிபாட்டுத் தளங்கள் மீதும் இவர்கள் தமது மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்த மக்களும் இன்று மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர். மூன்று தசாப்த காலகோர யுத்தத்தினால் படு மோசமாகப் பாதிக்கப்பட்டு இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து விடுபடாத நிலையில் இருக்கும் அவர்கள் மீதும் அவர்களது மத உணர்வுகளின் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈனச் செயலாகும்.

இந்த நாட்டில் மனிதனின் நல்வாழ்வை நாசப்படுத்தும் மதுபான சாலைகளும் விபச்சார விடுதிகளும் கெஸினோ விடுதிகள் மற்றும் பஞ்சமா பாதக செயற்பாடுகளும் மலிந்திருந்த போதும் அதன்மீது தங்களுடைய பார்வைகளைச் செலுத்தி மக்களை நேர்வழிப்படுத்த வேண்டியபணிகள் தொடர்பில் சிந்திக்காமல் பள்ளிவாயல்களையும் மத்ரஸாக்களையும் கோயில்களையும் கிறிஸ்தவாலயங்களையும் தாக்கி அழிப்பதும் மனித சமூகத்திற்கு செய்யும் பாதகச் செயலாகும்.

வெலிவேரியாவில் சுத்தமான நீர் கேட்ட மக்களுக்கு துப்பாக்கியால் பரிசு கொடுத்து துர்ப்பாக்கிய சம்பவமும் நமது நாட்டில் அண்மையில் நடந்துள்ளது. இது எவ்வளவு அநியாயம். இந்த மிலேச்சத்தனமான தாக்குதலையும் நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வெலிவேரிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். இத்தகைய வன்முறைகளும் மதத் தீவிரவாதமும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதற்காக ஆட்சியில் இருப்பவர்கள், ஆளுமைமிக்கவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக வழிகாட்டிகள் இன மத பேதம் பாராது ஒன்றிணைந்து நடைபெறுகின்ற இந்த அராஜக செயற்பாடுகளுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்".

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X