2025 மே 05, திங்கட்கிழமை

விகாரை அமைக்கும் திட்டத்தை நிறுத்தவும்: மகஜர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

'அம்பாறை, தங்கவேலாயுதரம் கிராமத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பௌத்த விகாரை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அம்மஜகரின் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'திருக்கோயில் பிரதேசத்தில் தங்கவேலாயுதரம் கிராமத்தில். தற்போது அங்கு நான்கு தூண்கள் இவர்களால் நடப்பட்டுள்ளன. எக்காலத்திலும் பௌத்தர்கள் வாழாத அந்த பகுதியில் தற்போது பௌத்த விகாரை ஸ்தாபிக்கும் திட்டத்தை இம்மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் தாங்கள் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகின்றேன்.

கடந்த கால யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தங்கவேலாயுதபுரம், காஞ்சிரங்குடா, சாகமம், கஞ்சிகுடிச்சாறு பகுதி மக்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து தற்போது தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி உள்ளனர் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இவ்வேளையில் ஒருபோதும் சிங்கள மக்கள் வாழாத பகுதியில் பௌத்த விகாரை உருவாக்கப்படுவது தமிழ், சிங்கள மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும். சிங்கள மக்கள் வாழும் பகுதியில் அவர்களது வழிபாட்டு நலன்கருதி பௌத்த வணக்கஸ்தலங்களை உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த இனவாதிகள், பௌத்த பிக்குகளின் எற்பாட்டில் இராணுவத்தினரின் அனுசரணையுடன் பௌத்த விகாரை உருவாக்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

தங்களைப் பொறுத்தவரையில் அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களையும் அவர்களது அடிப்படை உரிமை பாதிக்காத வகையில் ஏற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றீர்கள் என்பதை அண்மையில் உகந்தை முருகன் ஆலய அருகாமையில் பௌத்த விகாரை தாபிக்கும் திட்ட செயற்பாடு சார்பாக எனது மகஜருக்கு தாங்கள் அனுப்பி வைத்த பதில் மடல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்நிலையில இவ்வாறான திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரை தாபிக்கும் செயற்பாடு தங்களுக்கு தெரியாமல் இடம்பெற்று இருக்கலாம் என நான் கருதுகின்றேன்.

எனவே இவ்விடயமாக உடனடியாக தலையிட்டு தமிழர் பகுதியான தங்கவேலாயுபுரத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் பௌத்த விகாரை தாபிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். தங்களது நடவடிக்கை சார்பாக பதிலை அன்பாக எதிர்பார்க்கின்றேன்' என அவர் மஜகரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் மதவிவகார அமைச்சர், இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர், திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X