2025 மே 02, வெள்ளிக்கிழமை

தம்புள்ளை காளி கோயில் உடைப்புக்கு கண்டனம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது என்பதற்கு சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டியுள்ள நல்ல சம்பவமே தம்புள்ளை காளி ஆலய உடைப்பாகும் என தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), காளி கோவில் உடைப்பு சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் அடக்கி ஒடுக்கப்படும் நிலையில் அது அகிம்சை போராட்டம் நடத்தி ஆயுதப்போராட்டமாக மாறி பல ஆயிரக்கணக்கான இழப்புகளை நாங்கள் சந்தித்து இன்று மௌனித்துப் போயுள்ளது.

இந்த நாட்டில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் அனைத்தும் பொய்யானவை இங்கு சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்திடம் கூறிவந்தன.

ஆனால் சிறுபான்மை சமூகத்தினை அடக்கி ஒடுக்கி அவர்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றேவருகின்றன. சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை உன்னிப்பாக அவதானித்து வரும் நிலையிலும் எம்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர்களை பயங்கரவாதியாக காட்டிய காலம் மாறி இன்று போக்கற்றவர்களாக மாற்றுவதற்கான செயற்பாடுகளை சிங்கள தேசம் இன்று அரங்கேற்றி வருவதையே தம்புள்ளை காளியம்மன் ஆலயம் உடைப்பு எடுத்துக்காட்டுகின்றது.

தம்புள்ளை நகர வரலாற்றினை எடுத்து நோக்கினால் தமிழர்களின் தலை நகரமாகவும் ஆட்சி பூடமாகவும் தம்புள்ளை இருந்ததை காட்டுகின்றது. ஆனால் இன்று அங்கு தமிழர்கள் வசிப்பதற்கோ தமது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கோ முடியாத நிலை உருவாகியுள்ளது.

32 தமிழ் குடும்பங்கள் உள்ளபோது கோவில் தேவையில்லையென பௌத்த பிக்குகளாலும் படைத்தரப்பு என நம்பப்படுபவர்களாலும் இந்த கோவில் உடைக்கப்பட்டுள்ளது.

32 தமிழ் குடும்பங்களுக்கு கோவில் தேவையில்லையென்றால் மட்டக்களப்பில் சிங்களவர்கள் வசிக்காத நிலையில் பல விகாரைகள் எதற்கு என அந்த பௌத்த மதவாதிகளிம் கேட்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பௌத்த தலங்களை தமிழ் மக்கள் காப்பாற்றி அவற்றினை பேணி வந்த நிலையில் தமிழர்கள் வழிபட்ட ஒரு ஆலயம் தம்புள்ளையில் உள்ள சிங்கள பிரதேசத்தில் உடைத்துள்ளதானது மிகவும் கீழ்தரமான விடயமாகவே பார்க்கப்படவேண்டும்.

இதேபோன்று அங்குள்ள முஸ்லிம் மக்களின் பள்ளிவாயலையும் அங்கிருந்து அகற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வேளையில் எமது மதத்தலங்களை பாதுகாக்க அரசியல்வேறுபாடுகளுக்கு அப்பால் இன்று ஒன்றுசேரவேண்டிய தேவை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.

இந்த நாட்டில் சிறுபான்மை இனம் ஒன்று இல்லை. அனைவரும் ஒன்றாகவே பார்க்கப்படுவர் என அடிக்கடி வாய்கிளிய கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அரசாங்கத்தினை சேர்ந்தவர்களும் இதுவரையில் தம்புள்ளை காளியம்மன் ஆலயம் உடைப்புக்கு வாய்மூடி மௌனியாக இருப்பது பலத்த சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X