2025 மே 02, வெள்ளிக்கிழமை

புவி ரஹ்மதுல்லாஹ்வின் கைதிற்கு மீடியா போரம் கரிசனை

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியை தளமாகக் கொண்டு வெளியிடப்படும் வார உரைகல் பத்திரிகையின் ஆசிரியர் புவி ரஹ்மதுல்லாஹ் கஞ்சா வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கரிசனை செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தான் ஒருபோதும் கஞ்சா பொதியினை வைத்திருக்கவில்லை என வார உரைகல் ஆசிரியர் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் அவரைக் கைது செய்துள்ளமையானது கவலையளிப்பதாக உள்ளது. தன்னைப் பழிவாங்கும் நோக்கிலும் சிலரது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கிலுமே காத்தான்குடி பொலிசார் இவ்வாறானதொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக புவி ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தனது பத்திரிகையில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் அதிருப்தியடையும் ஒரு சாராரே இவ்வாறான செயற்பாடுகளையும் வன்முறைகளையும் தன்மீது கட்டவிழ்த்துவிடுவதாகவும் புவி ரஹ்மதுல்லாஹ் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகளால் எவரேனும் பாதிக்கப்படும்பட்சத்தில் அது தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதே வழக்கமான நடைமுறையாகும். அதைவிடுத்து குறுக்கு வழி¬களில் இவ்வாறு ஊடவியலாளர்களை எவரேனும் அச்சுறுத்த முனைவார்களாயின் அது நாட்டின் சுயாதீன ஊடக செயற்பாடுகளுக்கு பெரும் தடையாகவே அமையும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஏலவே பல தடவைகள் புவி ரஹ்மதுல்லாஹ் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

எனவேதான் புவி ரஹ்மதுல்லாஹ் மீது சுமத்தப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிசார் நீதியாகவும் நியாயமாகவும் செயற்பட வேண்டும் என வேண்டுகோள்விடுப்பதுடன் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விசேட கவனம் செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X