2025 மே 01, வியாழக்கிழமை

மாடுகள் சுட்டுகொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைகளுக்கு கொண்டுசெல்லும் மாடுகள் பெரும்பான்மையினத்தினை சேர்ந்தவர்களினால் சுட்டுக்கொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேய்ச்சல் தரைகளில் விடப்படும் மாடுகள் பெரும்பான்மையினத்தவர்களால் சுட்டுகொல்லப்படுவதுடன் சிலர் அவற்றினை பிடித்துவைத்துகொண்டு பணம் கேட்டு மிரட்டுவது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

'கிராண் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மைலத்தமடு, வம்மிக்குளவட்டையில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று மாடுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன. இது தொடர்பில் அப்பகுதி பிரதேச செயலாளர் எனது கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் உள்ள புளியடிமுகாம் பகுதியில் மேய்ச்சல் தரையில் நின்ற 12 மாடுகள் அப்பகுதிக்கு வந்தவர்களினால் பிடித்துச்செல்லப்பட்டுள்ளன.

அத்துடன் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நவரகல பகுதியில் 'மேய்ச்சல்' தரையில் நின்ற மூன்று மாடுகள் பிடித்துச்செல்லப்பட்டுள்ளன. அதேபோன்று செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மங்கலகம –அருந்தலாவைக்கு இடைப்பட்ட பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் பிடித்துச்செல்லப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் குறித்த பிரதேச செயலாளர்களின் கவனத்துக்கு பண்ணையாளர்கள் கொண்டுசென்றுள்ளதுடன் எனது கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளனர்.

பிடிக்கப்படும் மாடுகளை மீளப்பெறுவதற்கு 10ஆயிரம் ரூபா முதல் 50ஆயிரம் ரூபா வரையில் கேட்டு மிரட்டுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இத்தொகையினை கொடுத்து தமது கால்நடைகளை மீட்கமுடியாமல் கால்நடை பண்ணையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதுதொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளேன். பல காலமாக மேய்ச்சல்தரை காணிகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றும் இதுவரையில் அவர்களுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை.

பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த சிலர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையானது இனக்கலவரம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் திட்டமிட்ட செயல் என சந்தேகிக்க தோன்றுகின்றது.

கால்நடைகளை பிடித்து அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு சில பொலிஸ் நிலையங்களும் உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக மேய்ச்சல் தரையில் மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டுசென்றவர்கள் அவற்றினை திருப்பிவிடும் நிலையே ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது பெரும்போக செய்கை பண்ணப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலையும் ஏற்படலாம்.

எனவே தமிழ் கால்நடை பண்ணையாளர்கள் எதுவித அச்சமும் இன்றி தமது மேய்ச்சல் தரைகளில் கால்நடைகளை விடுவதற்கு உரிய தரப்பு நடவடிக்கையெடுக்கவேண்டும்' என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .