2025 மே 01, வியாழக்கிழமை

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; ஆட்டோ சாரதி கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு நகரில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி ஒன்றின் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் முச்சக்கரவண்டிச் சங்கத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் சுமந்திரன் என்பவரை  நேற்று  சனிக்கிழமை   மாலை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்புப்  பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவரை சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவுக்குச் சொந்தமான பயணிகள் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் மீது நேற்று சனிக்கிழமை  பகல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த இவர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள பஸ் வண்டித் தரிப்பிடத்தில் மேற்படி பஸ் வண்டியை நிறுத்தியபோது, முச்சக்கரவண்டிச் சாரதிகள் தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு நகருக்கு வரும் சகல பஸ் வண்டிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று திரும்ப வேண்டும் என்று எடுத்த தீர்மானத்திற்கு  பதிலடியாக, இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிச் சாரதி மற்றும் நடத்துநர் மீது மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகருக்கு வரும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சகல பஸ் வண்டிகளும் நேற்று சனிக்கிழமை  காலையிலிருந்து  மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைவரை சென்று வர ஆரம்பித்திருந்தன.

இதற்கு முன்னர் மட்டக்களப்பு நகருக்கு வரும்  சகல பஸ் வண்டிகளும் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தோடு பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி விடுவது உண்டு.

இதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள், நோயாளிகளைப் பார்வையிடச் செல்வோர் மற்றும் வைத்தியாலையில் பணிபுரிவோர் என அனைவரும் மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டிகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு  மட்டக்களப்புப் வைத்தியசாலைக்குச் செல்வது உண்டு.

தற்போது இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தமது பஸ் வண்டிச் சேவைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவரை நீடித்திருப்பதால் பயணிகள் அதனை வரவேற்றுள்ளனர்.

இருந்தபோதிலும்,  தங்களுக்கு  வாடகைக்கு அமர்த்திச் செல்ல பயணிகள் இல்லை என முச்சக்கரவண்டிச் சாரதிகள்  ஆத்திரமடைந்ததன் வெளிப்பாடே பஸ் வண்டிச்  சாரதி மற்றும் நடத்துநர்  மீதான தாக்குதல் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, முச்சக்கரவண்டிச் சாரதிகளின் பஸ் வண்டிகள் மீதான தாக்குதலை பயணிகள் கண்டித்துள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவரை பஸ் சேவைகளை நீடிக்குமாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், மட்டக்களப்பு வரியிறுப்பாளர் சங்கம், பயணிகள் சங்கம் உள்ளிட்ட பலர் தமக்கு வேண்டுகோள்கள் விடுத்திருந்ததாக சாலை முகாமையாளர் ஜீ.மனோகரன் தெரிவித்தார்.

எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் பயணிகளின் நலன் கருதிய மக்கள் மயப்படுத்திய தமது பஸ்சேவைகள் நிறுத்தப்படமாட்டாது எனவும்; அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .