2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபருக்கு எதிராக முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜனவரி 07 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கடந்த வருடம் 7 ஆம் ஆண்டில் கல்வி கற்ற தனது மகளான எம்.ஜே.எம்.சபர்ஜை 8ஆம் தரத்தில் கல்வி கற்க பாடசாலையின் அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது தந்தையான காத்தான்குடி 2ஆம் குறிச்சியைச் சேர்ந்த எம்.எச்.எம்.ஜாபீர் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு புலன் விசாரணை அதிகாரி ஏ.சி.அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

இவ்வாறான முறைப்பாடொன்று  கடந்த 4 ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மேற்படி வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த எனது மகளின் 3ஆம் தவணைப் பரீட்சைக்கான மாணவர் தேர்ச்சி அறிக்கையில் அவர் 'வகுப்பேற்றப்படவில்லை' எனக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 3.1.2014 திகதி வெள்ளிக்கிழமை எனது மகளையும் அழைத்துக்கொண்டு நான் அவ்வித்தியாலயத்திற்குச் சென்றேன்.

'பூஜ்ஜியம் புள்ளிகள் எடுத்த மாணவரையும் வகுப்பேற்றவே வேண்டும்' என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அகமட் லெவ்வையிடம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்தை அதிபரிடம் சுட்டிக்காட்டி எனது மகளை  8ஆம் தரத்தில் இவ்வருடம் கல்வி கற்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அதற்கு அவர், 'இந்தப்பாடசாலையில் நானும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் எடுத்திருக்கின்ற தீர்மானத்திற்கு அமையவே என்னால் செயற்பட முடியும். நாங்கள் புள்ளிகள் குறைவாக எடுத்த 'வகுப்பேற்றப்படாத' மாணவர்களை இந்த வருடமும் அதே வகுப்புக்களில் வைத்து கற்பிப்பதாகவே தீர்மானம் எடுத்துள்ளோம். ஊடகங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களையோ அல்லது இப்பாடசாலை அபிவிருத்திச் சங்கம் எடுக்காத தீர்மானங்களை அமுல்படுத்த முடியாது. வேண்டுமென்றால் உங்களின் பிள்ளை 8ஆம் ஆண்டுக்கு வகுப்பேற்றப்பட்டுள்ளதாக அவரது விடுகைப் பத்திரத்தில் எழுதித் தருகின்றேன். அவரை வேறு ஏதாவது ஒரு பாடசாலையில் சேர்த்து படிப்பியுங்கள்' என்று திட்டவட்டமாக கூறினார்.

'இதனால் எனது மகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், இனிமேல் நான் எந்தப் பாடசாலைக்கும் சென்று கல்வி கற்க மாட்டேன் என்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்.

எனது பிள்ளையின் கடந்த வருட கல்வி நிலை பற்றி இவ்வித்தியாலய அதிபர் எந்த விதமான முன்னறிவிப்புக்களையும் எனக்குத் தெரிவிக்கவில்லை.

அவரது மாணவர் தேர்ச்சி அறிக்கையில் 1ம், 2ம் தவணைக்கான குறிப்புக்களில் அவர் கல்வியில் பின்தங்கியுள்ளார் என எந்தக் குறிப்புகளையும் அவர் எழுதியிருக்கவில்லை. 3ம் தவணைக் குறிப்பில் மாத்திரம் 'வகுப்பேற்றப்படவில்லை' என குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

எனது மகளின் கல்வி விடயத்தில் அதிபரும், வகுப்பாசிரியரும் கவனக்குறைவாக ஏனோதானோ என்ற மனோ நிலையில் இருந்து கடமைக்காகக் கையொப்பங்களை வைப்பவர்களாக இருந்துவிட்டு இப்போது புள்ளிகள் குறைவாக எடுத்தார் என்பதற்காக அவரை வகுப்பேற்ற முடியாது என்று சொல்வதில் என்ன நியாயமிருக்கின்றது?

இது விடயத்தில் நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்' என அவர் முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம்; தொடர்பில் பாடசாலையின் அதிபர் எஸ்.எல்.ஏ.கபூரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்விடயம் தொடர்பாக தான் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அகமட் லெவ்வையிடம் கேட்ட போது

'எந்தவொரு பாடசாலை மாணவரையும் தரம் ஒன்றிலிருந்து கல்விப் பொதுத்தராதர சாதரண தரம் வரை வகுப்பேற்றாமல் இருக்கமுடியாது. வகுப்பேற்றியே ஆகவேண்டும். இது கல்வியமைச்சின் ஆலோசனையாகும். இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இதுவரை எனக்கு வரவில்லை' என தெரிவித்தார்.

இம்முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு புலன் விசாரணை அதிகாரி ஏ.சி.அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .