2025 மே 01, வியாழக்கிழமை

எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நிதி கிடைக்கும்: சார்ள்ஸ்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 09 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


இந்த வருட ஆரம்பத்தில் எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாரியளவு நிதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இம்மாவட்ட அபிவிருத்திக்காக கடந்த வருடம் 3,500 மில்லியன் ரூபா நிதியை செலவளித்து, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

போக்குவரத்துச் சேவையில் 25 வருடங்கள் சேவையாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு மாவட்ட போக்குவரத்துச் சாலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு டிப்போவுக்கு தான் 15 புதிய பஸ்களைத் தந்துதவுவதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் எனக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேறவில்லை என்பது இன்றுதான் தெரியவந்தது.  எனவே, இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுத்து மட்டக்களப்பு டிப்போவுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டபடி 15 பஸ்களையும் பெற்றுத்தர நான் நடவடிக்கை எடுப்பேன்.

இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவையாக போக்குவரத்து உள்ளது. பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், அதிகாரிகள், வைத்தியர்கள், நோயாளிகள், தாதியர்கள் என அனைவருக்கும் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பது இன்றியமையாததாகும். மேலும், இந்த போக்குவரத்துச் சேவை ஊழியர்கள் அர்ப்பணிப்போடு சேவையாற்றுகின்றார்கள். இவ்வாறு பொறுப்புடன் சேவையாற்றுபவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தனது கௌரவத்தையும் கண்ணியத்தையும் செலுத்துகின்றது.

என்னதான் இயங்காவிட்டாலும் போக்குவரத்துச் சேவை இயங்காது போனால்; நகரம், கிராமம், நாடு என்று எல்லாமே ஸ்தம்பித்து விடும்.
அந்த வகையில்,  ஒரு மனிதனுடைய இலக்கு நோக்கிய பயணங்களுக்கு போக்குவரத்துச் சேவை துணைபுரிகின்றது.

எமது நாடு போக்குவரத்துச் சேவையில் 80 சதவீதம் இலங்கைப் போக்குவரத்துச் சேவை பஸ்களிலேயே தங்கியுள்ளது. இத்தகைய ஒரு பாரிய சேவையைச் செய்து கொண்டிருக்கும் போக்குவரத்துச் சபை ஊழியர்களை பாராட்டுவதில் நான் மன நிறைவடைகின்றேன். நாளெல்லாம் தெருவிலே கழிகின்ற உங்களது தியாக சேவையை தலைகுனிந்து வாழ்த்தி கௌரவிக்கிறோம்.

25 வருடங்களாக போர் இடம்பெற்ற காலத்திலேயே நீங்கள் உங்களைத் தியாகம் செய்து சேவையாற்றியிருப்பதென்பது ஒரு சாதாரண விடயமல்ல.  இந்தக் காலப்பகுதியில் சவால்கள், எதிர்ப்புக்கள், பல்வேறு குழுக்களினது அட்டகாசங்கள், அச்சுறுத்தல்கள், பல்வேறு தரப்பினரின் சோதனைச் சாவடிகள் என்பனவற்றைக் கடந்ததாக உங்களது உயிர்த்தியாகம் மிக்க சேவை அமைந்திருந்தது.

அந்த வேளைகளிலெல்லாம் நீங்கள் உங்களையும் உங்களது குடும்பத்தையும்  துச்சமென மதித்து சேவையாற்றியதோடு பயணிகளையும் பாதுகாத்திருக்கின்றீர்கள்.

வன்னியிலே இருந்து மக்கள்  இடம்பெயர்ந்தபோது, அவர்களுக்குக் கை கொடுத்தது போக்குவரத்துச் சேவையினராகிய உங்களது சேவைதான்.
வன்னியிலிருந்து ஓமந்தையூடாக வவுனியாவுக்கு அகதிகள்  திரண்டபொழுது, அவர்களை அங்கிருந்து அகதி முகாம்களுக்கு அழைத்துச் சென்ற அர்ப்பணிப்பாளர்கள் இந்த போக்குவரத்துச் சபை ஊழியர்கள்தான்.

இந்த சேவையை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. நாடு என்றென்றும் உங்கள் சேவையை நினைவு கூரும்.

சாலை முகாமையாளர் ரீ. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமையக சிவில் பொறியியலாளர் எஸ்.முருகநேசன், கிழக்குப் பிராந்திய கணக்குப் பரிசோதகர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு போக்குவரத்துச் சாலையில் 25 வருடங்கள் சேவையாற்றிய  13 பேரும் மற்றும் போக்குவரத்துச்சாலை நலன்புரி அமைப்பில் அர்ப்பணிப்போடு சேவையாற்றிய இருவரும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, போக்குவரத்துச் சேவை ஊழியர்களின் நலன்புரி அமைப்பினால் அந்த அமைப்பிலுள்ள அங்கத்தவர்களின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா நன்கொடை உதவு தொகையும் வழங்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .