2025 மே 01, வியாழக்கிழமை

தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் விழுங்கப்படுகின்றன: த.தே.கூ

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார்


வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என மட்டக்களப்பு சபராஜ் இன் விடுதியில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரிய நேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம், இரா.துரைரத்தினம், ஜனா கருணாகரன், பிரசன்னா இந்திர குமார், எம்.நடராசா, கிருஸ்னப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொட்டு இன்று வரை இலங்கையின் பண்மைத்துவம், வழி வழியாக வந்த பேரின வாத அரசுகளினால் முர்க்கத்தனமாக மறுக்கப்பட்டே வந்து கொண்டிருக்கின்றது.

விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

வடக்கு-கிழக்கு வாழ் தமில் பேசும் மக்கள் தங்கள் தனித்துவங்களை பேணும் வகையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த தேர்தல்களில் தங்கள் ஆணையை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால், இலங்கை ஆளும் தரப்பினரோ இது ஓர் சிங்கள பௌத்த நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடற்கரைப்பகுதியில் கட்டப்படும் உல்லாச விடுதிகள் தமிழர் தம் கலாசார சீரழிவுக்குக் காரணமாய் அமைவதோடு இங்குள்ள வலைப்பாடுகள் வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை மீனவர்களால் அதிகார முனைப்போடு கைப்பற்றப்பட்டு கைமாறிப் போவதால் எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகப் பெரும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது

நிலப்பிரதேசத்;தை பொறுத்தவரையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தினரால் மேற் கொள்ளப்படும் அத்து மீறிய குடியேற்றமும், மேய்ச்சல் தரை அபகரிப்பும், கரும்புச் செய்கை, சுற்றாடல் அமைச்சின் வர்த்தமானிப்பிரகடனம், புதிதாக முளைக்கும் பௌத்த விகாரைகள் நிறைந்துள்ள இராணுவத்தினரதும், புலனாய்வாளர்களின் நடவடிக்கைகள் என்பவற்றால் எமது மக்களின் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கப்படுவதோடு இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் தமது இயல்பு வாழ்வை படிப்படியாக இழந்து வருகின்றனர் .மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர் பற்று, கிரான், வாகரை, ஆகிய ஆறு பிரதேச செயலகங்களினதும் அம்பாறை மற்றும் பொலனறுவை,  மாவட்ட எல்லைகளில் வௌ;வேறு பின்னணிகளோடு அத்து மீறி குடியேறி பயிர்ச் செய்கை மேற் கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மையினரால் ழோயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு காடழிப்பு, மற்றம் மேய்ச்சல் தரையைக் கைப்பற்றல் எனும் நடவடிக்கைகளினால் அபகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இலட்சத்து  ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளை பராமரித்து வந்த மேய்ச்சல் தர நிலம் அபகரிக்கப்பட்டு கால் நடை வளர்ப்பாளர்கள் குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளதோடு எமது மக்கள் எதிர்காலத்தில் குடியேறவும், பயரிச் செய்யவும், நலமற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரும்புச்செய்கை.                             

செங்கலடி,வவுணதீவு,கிரான் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 11500 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு கரும்புச்செய்கை மேற்கொள்வதற்காக இனங்காணப்பட்டுள்ளது.இவற்றில் ஏராளமான நிலம் சுவிகரிப்புக்கு உள்ளாக இருப்பதுடன் மிகுதிப்பகுதியில் நெற்செய்கையில் தேர்ச்சியுள்ள எமது விவசாயிகள் ஏமாற்றப்படவுள்ளனர். சோமாலியா மற்றும் தான்சானியாவில் கரும்புச் செய்கை காரணமாக மண் வளமற்றுப்போய் மீண்டும் எவ்விதத்திலும் வளமூட்ட முடியாதுள்ள துர்ப்பாக்கிய நிலை இங்கு திட்டமிட்டு மறைக்கப்பட உள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடு.

இவ் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் 122,226 ஏக்கர் நிலத்தை சுற்றாடல் காப்பகங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்காரணமாக எமது மக்கள் இப்பகுதியில் நடமாட முடியாத நிலமை ஏற்படுவதோடு இப்பகுதிகளில் உள்ளடக்கப்படும் எமது மக்களின் மேய்ச்சல்தரை, குடியிருப்புப் பூமி, பயிர்ச்செய்கை நிலம் என்பன பறிபோகும் நிலையில் உள்ளன.

புதிய புதிய பௌத்த விகாரைகள் அமைக்கப்படுதல்.

யுத்தம் முடிவுற்றதன் பின் எமது மாவட்டத்தில் சிறியதும் பெரியதுமான 07விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.விகாரையின் மணியோசை கேட்கும் தொலைவுவரை பௌத்த குடியிருப்புகளே இருக்கவேண்டும் என்ற இலங்கைப் பௌத்த பீடத்தின் கொள்கை நடைமுறைப் படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் எமது மக்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப் படும் என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. 

இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறியதும் பெரியதுமான 54இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் உள்ளன.இவை கிட்டத்தட்ட 646 ஏக்கர் நிலப்பரப்பைத் தம்மகத்தே கொண்டுள்ளன.சில இராணுவ முகாம்களின் அமைவு காரணமாக அங்கிருந்த பாடசாலைகள் வசதி குறைந்த வேறிடங்களுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளன.மேலும் சில தனியார் வீடுகளில் புதிதாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் வீடுகளின் சொந்தக்காரர்கள் வாடகை வீடுகளிலோ இரவல் வீடுகளிலோ இருந்து காலந் தள்ளவேண்டியுள்ளது.

 இங்கெல்லாமுள்ள இராணுவத்தினரதும் புலனாய்வாளர்களதும் மற்றும் இவர்களால் பணிக்கமர்த்தப்பட்டுள்ள சாதாரண குடிமக்களாய் நடமாடும் கூலிப் புலனாய்வாளர்களதும் செயற்பாடுகளால் மக்கள் பேச்சுச் சுதந்திரம் , கருத்து வெளியிடும் சுதந்திரம் , சிந்தனைச் சுதந்திரம் , ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம் போன்ற அரசியலமைப்பால் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை முழுமையாகப் பாவிக்க முடியாதவர்களாயுள்ளனர்.

இவற்றையெல்லாம நோக்கும்போது மட்டக்களப்புவாழ் தமிழ் மக்களின் எதிர்காலம் அவர்தம் கலை,கலாசாரம்,மொழி,வாழ்க்கைமுறை,அரசியற் பிரதிநிதித்துவம்,அரச நிர்வாகத்தில் பங்கேற்றல் ,தமதும் தமது வாழ்நிலத்தினதும் அடையாளத்தைப் பேணல் போன்ற எல்லா அம்சங்களிலும் சவால்மிக்கதொன்றாகவே அமையப் போகின்றதென்ற நியாயமான அச்சம் தோன்றுகின்றது.

எனவே,இத்தகு சவால்களை முளையிலேயே கிள்ளியெறியும் வகையில் மட்டக்களப்பு வாழ் மக்கள் விழிப்போடு செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .