2025 மே 01, வியாழக்கிழமை

செட்டிப்பாளையத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய முன்பள்ளி ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 21 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் ஏற்பாட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான முன்பள்ளி திங்கட்கிழமை (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆலயங்கள் ஆன்மீகப்பணிகளில் மட்டும் நின்றுவிடாது பொதுப்பணிகளிலும் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் செட்டிபாளையத்தில் 'சிவன் கிட்ஸ் ஹோம்' என்ற நாமத்துடன் இந்த அதிநவீன முன்பள்ளியை திறந்துவைத்துள்ளதாகவும் இது தற்காலிகமாக வாடகை கட்டிடமொன்றில் இயங்கவுள்ளதாகவும் ஆலய சங்கத்தின் உப தலைவரும் திட்டமிடல் பணிப்பாளருமான முருகேசு பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இப் பாடசாலையில், கணணி வசதியுடனான விளையாட்டுகளுக்கான வசதிகள், ஒளிப்படக் கற்பித்தலுக்கான தொலைக்காட்சி வசதிகள், விளையாட்டு தளபாடங்களுடனான விளையாட்டுக் கூடம், விளையாட்டு செயற்பாட்டு அறை, கணிதத்தள உருக்களின் எண்ணக்கருக்களை வெளிப்படுத்தக்கூடிய வர்ணங்களாலான வட்ட, சதுர, முக்கோண, நீள்சதுர மேசைகள் எனப் பல வசதிகள் உள்ளன.

அதிபர் சேவையில் ஓய்வுபெற்ற முதலாம் தரமுடைய அதிபரும் முன்பள்ளி மாணவர்களுக்கான டிப்ளோமாக்களை நிறைவு செய்த விசேட தர ஆசிரியர்களும்; இப்பள்ளியில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுப்படவுள்ளனர். இங்கு ஆங்கிலம் தமிழ் இணைந்த கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக 71 மாணவர்கள் இணைக்கப்பட்டு எல்.கே.ஜீ, யு.கே.ஜீ வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் மாணவர்கள் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், செட்டிபாளையம் சிவன்கோயில் திருவருள் சங்கத்தினால் இப்பாடசாலையில் தரம் 5 வரையான மாணவர்களுக்கு மாலைநேர மொழிசார் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போதைய நிலையில் வாடகை கட்டடத்தில் சுமார் 6 லட்சம் ரூபா செலவில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் சொந்தக் கட்டடத்தில் இப்பள்ளியை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆலய தலைவர் எஸ்.நாகலிங்கம் தலைமையில் நடைபெற்ற முன்பள்ளி ஆரம்பிப்பு நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா), கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண சுகாதார சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சிவன் ஆலயத்தின் அனைத்து விபரங்களும் அடங்கிய இணையத்தளம் முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸினால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன்  களுவாஞ்சிகுடி மக்கள் வங்கி கிளையினால் மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் உட்பட பல்வேறு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பாடசாலைக்கான மாணவர்களை இணைக்கும் நடவடிக்கையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .