2025 மே 15, வியாழக்கிழமை

காத்தான்குடிக்கு தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும்: றம்ழான்

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடிக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

மட்டக்களப்பு மத்திக்கல்வி வலயம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களை உள்ளடக்கியதாக கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வலயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு இனங்களையும் பிரிக்கின்றவகையில் ஆரம்பிக்கப்பட்டாலும் பல தடைகளைத் தாண்டி கடந்த மூன்று வருடங்களாக தேசிய ரீதியில் கல்விப் பெறுபேற்றில் க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் 1ஆம் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 71 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் அதிகளவிலான 32 பாடசாலைகளையும் அதிகமான ஆசிரியர்களையும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை காத்தான்குடி கல்வி வலயமே கொண்டுள்ளது. 

தேசிய ரீதியில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலாம் இடத்தைப் பெறுவதற்கு காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் பாடசாலைகளும் அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

மத்தி கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல்; காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திற்கான வலப்பங்கீடுகளில் பாரிய அநீதிகளை இழைக்கப்பட்டு வருவதுடன் பாரபட்சத்துடன் நடத்தப்பட்டு வருவததை சில ஆதரங்களுடன் சுட்டிக்காட்டினேன்.

காத்தான்குடிக்கான தனியான கல்வி வலயமாக அமைக்கப்படவேண்டும்; என்று அன்று தொடக்கம் இன்று வரையும் தொடர்ச்சியாக வலியுருத்தி வருகின்றேன்.

மேற்படி கோரிக்கைக்கு காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் ஆசிரியர்கள் சங்கமும் கல்விக் குழுக்களும், அரசியல் தலைமைகளும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது கவலைக்குரியது. இருந்தபோதிலும் அதன் தேவையும் அவசியமும் இப்போது எமது கல்விக் கோட்டத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதை மனச்சாட்சியுள்ள அதிபர்கள், ஆசியர்கள் மறுக்கமாட்டார்கள்.

மட்டக்களப்பு மத்திக் கல்வி வலயத்தின் காரியாலயம் ஏறாவூரில் அமைக்கப்பட்டதற்கான காரணம் அதன் நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காவே என்பதை எவரும் மறக்கலாகாது.

ஆனால் இன்று குறித்த வலயக் கல்விக் காரியாலயம் தனியே ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகமாக மாற்றம் பெற்று வருவதோடு அதன் சில செயற்பாடுகள் ஏறாவூரின் மேலாதிக்கத்திற்குட்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை சகிக்கமுடியாத ஓட்டமாவடிக் கல்விக் கோட்டம் தனக்கானதொரு தனியான வலயக் கல்வி அலுவலகத்தை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகின்ற இக்காலப்பகுதியில் 32 பாடசாலைகளையும் அதிகளவிலான ஆசிரியர்களையும் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான மாணவர்களையும் ஏனைய சகல வளங்களையும் உள்ளடக்கிய காத்தான்குடி கல்விக் கோட்டம் ஏன் தனியானதொரு வலயக் கல்வி அலுவலகத்தை பெறமுடியாது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .