2025 மே 01, வியாழக்கிழமை

'சரியான ஆதாரங்களுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்'

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்    
    
'மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் சில உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை வைத்துக்கொண்டு விசாரணை ஒன்றை ஆணைக்குழு மேற்கொள்ள முடியாது' என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை(6) முதல் இடம்பெற்று வந்த  காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசாரணைகள் திங்கட்கிழமையுடன்(9) நிறைவுபெற்றது.

இவ்விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, கடந்த 1990ஆம் ஆண்டு குருக்கள் மடம் பகுதியில் 167 முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட சாட்சியங்கள் தொடர்பாக ஊடகவியாலளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.

இதற்கு பதலளித்த அவர்,

'மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில்; சில உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தற்போது விசாரணையிலுள்ளது.

சரியான ஆதாரங்களுடன்தான் இந்த விவகாரம் மேற்கொள்ளப்படல் வேண்டும். உடல்கள் அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மட்டும் வைத்துக் கொண்டு விசாரணையை ஆணைக்குழு மேற்கொள்ளமுடியாது. 
சரியான ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் ஆராயப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  'காத்தான்குடி கல்முனை வீதியில் முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு சாட்சியமளிக்கப்பட்டது.

அதேபோன்று மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அமர்வின் போது டெலோ இயக்கமும் இராணுவத்தினரும் மேற்கொண்ட கடத்தல்கள் தொடர்பாக சாட்சியங்கள் இருந்ததுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் இருந்தன.

முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளில் தனி நபர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

விசாரணைகள் நிறைவுக்கு வரும் போது எவரை விசாரணை செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .