2025 மே 01, வியாழக்கிழமை

நேர்மையின் புகலிடம் சட்ட உதவி ஆலோசனை

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரநேஷனல் நிறுவனத்தின் 'நேர்மையின் புகலிடம்' சட்ட உதவி ஆலோசனைச் சேவை சனிக்கிழமை (14) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி றமீஷர் தலைமையில் இடம்பெற்றது.

 ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரநேஷனல் நிறுவனத்தின் 'நேர்மையின் புகலிடம்' சட்ட ஆலோசனைச் சேவையின் சட்டத்தரணிகளான எப்.எக்ஸ்.விஜயகுமார், பி.எம்.சுலோஜன், மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கண்ணன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரி எஸ்.மனோகரன், ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு சார்ஜன் எம்.ஏ.சி.தாஹிர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொதுமக்கள் தாங்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதற்கு நேர்மையின் புகலிடம் நிறுவனம் வசதியளித்திருப்பதாக அந்த நிறுவனத்தின் மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கௌசிகன் தெரிவித்தார்.
 
இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கண்ணன்,

 'இலஞ்ச ஒழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்ற சர்வதேச நிறுவனங்களில் முக்கியமானது ட்ரான்ஸ்பெரன்ஸி இன்ரநெஷனல்.

அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்காக எமது ஒத்துழைப்பையும் பெற்றிருக்கின்றது.

மக்கள் முகம் கொடுக்கின்ற தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதுதான் எமது பணி. அது எந்தவிதமான பிரச்சினைகளாகவும் இருக்கலாம் அவற்றுக்கு எமது சட்டத்தரணிகள் இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்குவார்கள்.

காணிப்பிரச்சினை, ஆவணப் பிரச்சினை, கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, அயலவர்களால் பிரச்சினை, பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் நடவடிக்கைகள், பிரதேச செயலாளர், அல்லது நகர முதல்வரால் பிரச்சினை இப்படி பிரச்சினைகளின் வடிவம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் ஆலாசனை வழங்குவோம்.

நீங்கள் இலவசமாக ஆலோசனை பெறுவது மட்டுமல்ல இவ்வாறு பொதுமக்கள் இலவசமாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள ஒரு வழி இருக்கின்றது என்பதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இன்றிருக்கின்ற ஒரு நெருக்கடியான வாழ்க்கை முறையிலே சட்டத்தரணிகளைச் தேடிச்சென்று பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து அவர்களிடம் ஆலோசனை பெறுவதென்பது அசாத்தியமான விடயம்.

அதனால் மக்களின் காலடிக்கு வரும் இப்படியான இலவச சட்ட உதவி ஆலோசனைச் சேவைகளை மக்கள் முடிந்தளவு பெற்று நன்மையடைய வேண்டும்.

நீதியை மக்களின் காலடிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டம் நீதியமைச்சிலே இருக்கின்றது. அதன் பயனாகத்தான் ஒவ்வொரு 25 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன.

அதற்கும் மேலதிகமாக இவ்வாறான இடம்பெயர் சட்ட ஆலோசனை இலவச சேவைகள் நடத்தப்படுகின்றன. ஆகையினால் மக்கள் முரண்பாடுகளுடன் வாழாது இவ்வாறான இடம்பெயர் சேவைகள் மூலம் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு மன நிம்மதியோடு வாழலாம்' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .