2025 மே 01, வியாழக்கிழமை

தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 25 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


இந்திய இராணுவம் முல்லைத்தீவு காட்டுப்பகுதியை சூழ்ந்து கொண்டிருந்தபோது, 40 மட்டக்களப்பு போராளிகளுடன் சென்று முற்றுகையை உடைத்து விடுதலைப்புலிகளின் தலைவரை காப்பாற்றிய நாங்கள் இன்று துரோகிகளாக்கப்பட்டுள்ளளோம், அன்று இந்திய இராணுவத்துடன் சேர்ந்து எமது இளைஞர்களைக் கொன்றவர்கள் தேசியவாதிகளாக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளார் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன், அனர்த்த முகாமைத்து நிலையத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர்
எஸ்.இன்பராஜன்,  பிரதியமைச்சரின் பட்டிப்பளை பிரதேச இணைப்பாளர் அலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அனர்த்த முகாமைத்து அமைச்சிடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கான சுமார் 15ஆயிரம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்,
நாங்கள் கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம். எமது சமூகத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. அந்தபொறுப்பில் இருந்து நாங்கள் விலகிச்செல்லமுடியாது. சமூகம் பாதிக்கப்படும் நிலையில் இருந்து விடுவிக்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவேண்டியது அனைவரது கடமையுமாகும்.

இன்று முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது அங்கிருந்து எந்த அமைச்சரும் அரசாங்கத்தினை விட்டுச்செல்லவில்லை. அவர்கள் தங்களது இனத்துக்கு ஏற்பட்ட அநீதிகளுக்காக அரசாங்கத்துக்குள் இருந்து கடுமையாக குரல்கொடுத்துவருகின்றனர். அரசாங்கத்துடன் சண்டைசெய்கின்றனர்.

நாங்கள் அரசாங்கத்துக்குள் இருக்கும்போது எமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம். அதேபோன்று சமூகத்துக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும்போது அரசாங்கத்துக்குள் இருந்தே குரல்கொடுக்கலாம்.

ஆனால் நாங்கள் எதிர்ப்பு அரசியலைசெய்துகொண்டு எவற்றையும் அடையமுடியாது எமது சமூகத்தினை இன்னும் கீழ் நிலைக்கு கொண்டுசெல்வதால் நாங்கள் இன்னும் பின்னோக்கியே நகர்த்தப்படுவோம்.

இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளேன். காஞ்சிரஞ்குடாவில் இறங்குதுறை அமைத்து அங்கிருந்து இயந்திர படகு சேவையை மேற்கொள்ளும் வகையில் 50 இலட்சம் ரூபா நிதியை பெற்றுக்கொடுத்துள்ளேன். இதேபோன்று அரசடித்தீவு, அம்பிளாந்துறை பாடசாலைகளுக்கும் நிதிகளை ஒதுக்கீடுசெய்துள்ளேன். நான் ஒரு அமைச்சராக இருந்த காரணத்தினாலேயே இவற்றினை செய்யமுடிகின்றது. இவற்றை எதிர்க்கட்சிகளில் இருந்துகொண்டு செய்யமுடியாது. இதனை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

கடந்த 30 வருடகால எதிர்ப்பு அரசியல் காரணமாக நாங்கள் எதனையும் பெறவில்லை. எமது உரிமைகளை, கல்வி நிலையை நாங்கள் காப்பாற்றவேண்டும். இந்த விடயத்தில் மட்டக்களப்பு மக்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதிலும் இந்த விடயங்களில் படுவான்கரை பிரதேச மக்கள் உறுதியாக இருக்கவேண்டும்.

யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் படுவான்கரை பிரதேசமக்கள். வீட்டுக்கு இரண்டு மூன்று பேரை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும்.

வறுமையின் முதல் மாவட்டத்தில் இருந்து விடுபட்டு நான்கு மாவட்டங்களை நாங்கள் கடந்துள்ளோம். வாழ்வாதாரம் உயர்ந்துவருகின்றது. இன்றுதான் எமது மக்கள் வாழ்கின்றனர். இன்னும் 10வருடங்களில் எமது மக்களின் வாழ்க்கை மட்டம் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும்.

மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில்கொண்டு 40 சிறு குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றேன்.

இதேபோன்று வெலிக்கந்தையினையும் படுவான்கரையினையும் இணைக்கும் மிக முக்கிய வீதியின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்கதேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றேன். அவற்றினை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பாக இருந்த படுவான்கரை பிரதேசம் இன்று எவ்வாறு உள்ளது என்பதை எமது மக்கள் ஆராயவேண்டும்.அதற்கேற்றாற்போல் எதிர்காலத்தில் திட்டமிட்டு செயற்பட்ட வேண்டும் என கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .