2025 மே 02, வெள்ளிக்கிழமை

பட்டதாரிகள் தொழிலுக்கு கையேந்துபவர்களாக இருக்க கூடாது: கிட்ணன் கோபிந்தராஜா

Kogilavani   / 2014 ஜூலை 13 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


“பட்டப்படிப்பை முடித்த பின்பு நாங்கள் அரச உத்தியோகத்தைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். பட்டதாரிகள் தொழில் வழங்குவோராக இருக்க வேண்டுமேயன்றி அரசாங்கத்திடம் தொழிலுக்கு கையேந்துபவர்களாக இருக்கக் கூடாது” என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வெளிவாரிப் பட்டங்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(13) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அரச தொழிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த துரதிஷ்ட நிலைமையை மாற்ற வேண்டும். எமது நாடு மிகச் சிறியது என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் அரச சேவையில் ஐம்பதினாயிரம் பட்டதாரிகளை உள்வாங்க முடியாது.

கடந்த வருடம் ஐம்பதினாயிரம் பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டார்கள். அதில் அரைவாசிப் பேரை என்ன செய்வது, எந்தப் பிரிவில் நியமிப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

சில பிரதேச செயலகங்களிலே பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் எந்த வேலையும் இல்லாமல் தமது எட்டு மணித்தியால நேரத்தைக் கழித்ததை அவதானிக்க முடிந்தது.

விவசாயப் பட்டதாரி விவசாயத்தோடு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் கலாசார உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். தாய்மொழியைத் தவிர வேறு மொழிகள் தெரியாதவர்கள் மொழிபெயர்ப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இது எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் அவர்களுக்கு தங்கள் தேர்ச்சிகளை வெளிக்காட்டுவதை விட அரச உத்தியோகத்திலே கிடைக்கின்ற திருப்தி மட்டும் இருந்தால் போதும் என்பதைக் காட்டுகின்றது.

அலுவலகங்களிலே வேலை இன்றி இருந்தால் பரவாயில்லை, மரணிக்கும் வரை ஓய்வூதியம் உள்ள அரச தொழில் இருந்துவிட்டால் போதும் என்ற மன நிலை உருவாகிவிட்டது.

இந்த மன நிலையை எப்பாடுபட்டாவது மாற்றித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் நமது அறிவு ஆற்றல் எல்லாம் பாழாய்ப் போவதோடு எதிர்காலத்தில் பாரிய தொழிலில்லாப் பிரச்சினைக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும்.

அதனால்தான் வெளிவாரிப் பட்டப்படிப்புக்களை தரம்வாய்ந்ததாக ஆக்க வேண்டும் என்று அரசு கருதுகின்றது. நமது நாட்டு மாணவர்களை அறிவும் ஆற்றலும் ஆக்கபூர்வ செயற்பாடுகள் நிறைந்த மாணவர்களாக உருவாக்குவதற்கு அரசும் உயர்கல்வி அமைச்சும்  சிந்திக்கின்றது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்தப் பல்கலைக்கழகமும் அதன் கல்வியும் இப்பொழுது சீர் பெற்றிருக்கின்றது. கட்டிடங்களில் பாரிய மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது.

இப்பொழுதும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. மூன்று வருடம் என நிச்சயிக்கப்பட்ட கல்வி ஐந்து வருடத்தில் நிறைவு பெறுகின்றது என்கின்ற முறைப்பாடுகளும் இருக்கின்றன.

எமது ஆசிரியர்களின் மன நிலையிலும் நிச்சயமாக சில மாற்றங்கள் உருவாக வேண்டும்.

முப்பது வருட யுத்த காலத்தில் உழன்ற நம்மில் பலர் இன்னும் பரந்துபட்ட ஒரு மனோ நிலைக்கு வரவில்லை. அந்த வட்டத்திற்குள்ளிருந்து வெளியேறுவதற்கு இன்னமும் தயங்கியவர்களாகவே உள்ளார்கள். இதனால் பல தடைகளும் வருகின்;றன. வெளிவாரிப் பட்டப் படிப்புக்களுக்கான கற்கைகளுக்கு ஒரு விழா தேவையா என்ற விமர்சனமும் உள்ளது. இப்படிப்படிப்பட்ட மனப்பாங்குகளிலிருந்து மாற்றம் வரவேண்டும்.

பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்கள் தொழிலை எதிர்பார்த்து போராட்டம் நடாத்துபவர்களாக இல்லாமல் தொழில் வழங்குபவர்களாக உருவாக வேண்டும். இந்த விடயத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் ஓரளவுக்கு முன்னேறியிருக்கின்றது.

இன்னும் ஓரிரு வருடங்களில் கிழக்குப் பல்கலைக்கழக கல்வியிலும் அதன் வெளிப்பாடுகளிலும் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X