2025 மே 02, வெள்ளிக்கிழமை

எந்தப் பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுச் சான்றிதழ்களை பெறலாம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் உள்ள பதிவாளர் பிரிவு கணினி மயப்படுத்தப்பட்டு இணைய வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இம்மாவட்டத்தினுள் எந்தப் பிரதேசத்தில் பிறந்தவராயினும் அவர் வசிக்கும் பிரதேச செயலகத்தில் தனது பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுச் சான்றிதழ்களை   பெற்றுக்கொள்ள முடியும் என  காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் ஜே.முகம்மட் பைறூஸ் தெரிவித்தார்.

உதாரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் மாவட்டத்தினுள் எந்தப் பிரதேச செயலகப் பிரிவில் பிறந்தவராயினும், அவர் காத்தான்குடி பிரதேச செயலகத்திலுள்ள பதிவாளர் பிரிவில் இணைய வலையமைப்பின்  மூலம் பதிவுச் சான்றிதழ்களை  பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிறந்த அல்லது இறந்த ஒருவர் தமது பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றிதழ்களை  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பெறவேண்டிய நடைமுறை இருந்து வந்தது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களிலுள்ள பதிவாளர் பிரிவு கணினி மயப்படுத்தப்பட்டு இணைய வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து, மாவட்டத்தினுள் எந்தப் பிரதேசத்தில் வசிக்கின்றாரோ அந்தப் பிரதேச செயலகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் அதற்காக விண்ணப்பித்து வழமையான 100 ரூபாய்  கட்டணத்தைச் செலுத்தி; உரிய பதிவுச் சான்றிதழ்களை  பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் கூறினார்.

இதற்காக மேலதிக கட்டணங்கள் எதுவும் வழங்கத் தேவையில்லை எனவும் மக்களின் சிரமங்களை தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் இந்தத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X