2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பிரதேச மக்கள் இன்று திங்கட்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், மேற்படி இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி நகரில் கடை அடைப்புக்களும் முன்னெடுக்கப்பட்டன. 

இப்போராட்டம்; செங்கலடி வர்த்தக சங்கம், கிராம அமைப்புக்கள், முச்சக்கரவண்டிச் சங்கம் மற்றும்  பிரதேச மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

'அரச அதிபரே சற்றுச் சிந்தியுங்கள்', 'எம் கண்ணீர் துடைப்பவர் உதயசிறிதர்', 'உண்மையான ஊழியன் உதயசிறிதர்', 'கருணை உள்ளம் கொண்டவர் உதயசிறிதர்', 'அதிகார வர்க்கமே ஆணையிடுகிறோம்', 'மாற்றுத்திறனாளிகளான எமக்கு வாழ்வளித்தவன் உதயசிறிதர்', 'உதயசிறிதரை மாற்ற நினைப்பவரே முதலில் உன்னை மாற்றிக்கொள்', 'உண்மைக்காக உழைப்பவன் உதயசிறிதர்' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை  ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  ;  கையளித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்டோரும் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்தனர்.

மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'எமது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரை இன்றையதினம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு கச்சேரிக்கு இடமாற்றம் செய்வதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை கண்டித்தும் மேற்படி இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் ஏறாவூர்ப்பற்று பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்கள், செங்கலடி வர்த்தக சங்கம், முச்சக்கரவண்டிச் சங்கம், மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கடை அடைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.

அரசியல்வாதி ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு இணங்கி எமது பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  மக்களுக்காக மக்களுடன் இணைந்து  சேவையாற்றிவரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளாரின்  இந்த இடமாற்றமானது பொதுமக்களுக்கு அரச நிர்வாகத்தின் மீதுள்ள உண்மைத் தன்மையையும் சேவை மனப்பாங்கையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

நிர்வாக முகாமைத்துவத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்துக்கு கொண்டுவந்துள்ள பிரதேச செயலாளரை இரண்டு வருடங்களுக்குள் இடமாற்றம் செய்யவேண்டிய அவசர தேவை ஏன் ஏற்பட்டது? பிரதேச செயலாளர் செய்த தவறு என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

அரசியல்வாதி ஒருவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு வேண்டிய ஒருவரை பிரதேச செயலாளராக ஆக்க வேண்டும் என்பதற்காக மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த செங்கலடி பிரதேச செயலாளரை பதவி உயர்வு என்று மாயையை காட்டி கச்சேரிக்குள் முடக்குவதை பொதுமக்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேற்படி பிரதேச செயலாளரது சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் தேவை என்பதால் அவரது முறையற்ற இந்த இடமாற்றத்தை உடன் இரத்துச்செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஏழைச் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் வறிய மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் மேலதிகமாக பல உதவி திட்டங்களை முன்னேடுத்துவரும் எமது பிரதேச செயலாளரின் செயற்பாடுகளை அறியாதவர்கள் இல்லை. இந்த நிலையில், மேற்படி இடமாற்றமானது பல மாணவர்களின் கல்வியையும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிப்பதாகவே உள்ளது. இது குறித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அரச அதிகாரியை அரசியல்வாதி ஒருவரின் தனிப்பட்ட காரணத்துக்காக மாற்றம் செய்யலாம் என்ற இது போன்ற பிழையான முன் ஊதாரணங்களே இங்குள்ள பொதுமக்களும் புத்திஜீவிகளும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு காரணமாகவுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்திற்குள் இருக்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாது தங்களது சோந்த இலாபங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு தொடர்ந்தும் இதுபோன்ற மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதனாலேயே அரசாங்கத்தை மக்கள் எதிர்ப்பதற்கு காரணமாகவுள்ளது.

எனவே, மேற்படி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஏதிராக தமிழ் மக்களை தூண்டிவிடுகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனை அமைச்சர்கள் புரிந்துகொண்டு பொதுமக்களுக்கு நன்மை தரும் விடயங்களை செய்வதற்கு முன்வரவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X