2025 மே 02, வெள்ளிக்கிழமை

'நீனாகேணி பகுதி மக்களுக்கு அநீதி இழைப்பதை அனுமதிக்க முடியாது'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 15 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பரம்பரை பரம்பரையாக தோப்பூர் நாவற்கேணிக்காடு -நீனாகேணி பகுதியில் வசித்துவரும் மக்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் அப்பட்டமான அநீதியாகும். மனிதபிமானமுள்ள எவராலும் இதனை ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தோப்பூர் பிரதேச மக்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திடம் செய்த முறைப்பாட்டை அடுத்து பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்கான அவசர விஜயம் ஒன்றை  சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தோப்பூர் - நாவற்கேணிக்காடு  பிரதேசத்திற்கு மேற்கொண்டிருந்தார்.

கடந்த 12.07.2014 அன்று மேற்கொள்ளப்பட்ட குறித்த விஜயத்தின்போது அப்பிரதேச பிரமுகர்கள் பலரையும் நேரில் கண்டு கலந்துரையாடியதுடன், இது தொடர்பான ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.  இப்பிரச்சினைகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற ஆலோசனைகளையும் அம்மக்களுக்கு அவர் வழங்கினார்.

சேருவல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள தோப்பூர் - நாவற்கேணிக்காடு கிராம சேவையாளர் பகுதியில் காணப்படும் நீனாகேணிப் பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த 127 குடும்பங்களும் அரச காணியில் அத்துமீறி குடியிருப்பதாகத் தெரிவித்து எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதிக்குள் அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என அறிவுறுத்தும் கட்டளைக் கடிதங்களை அப்பகுதியின் பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்திருக்கின்றார்.

இது அந்த மக்களை கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியிருப்பதோடு, அவர்களது எதிர்கால இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

இப்பகுதியில் பல தசாப்தகாலமாக குடியிருந்துவரும் குடும்பங்களில் கணிசமானவர்களுக்கு பல வருடங்களுக்கு முன்னாள் அக்காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்பகுதி மக்கள் தமது குடியிருப்புக் காணிகளை அபிவிருத்தி செய்து நிரந்தர வீடுகளை அமைத்து அங்கு வாழ்ந்தும் வருகின்றனர். இம்மக்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு பொது நோக்குக் கட்டிடம் ஒன்றும் கூட அரச நிதியுடன் சில வருடங்களுக்கு முன்னால் அங்கு கட்டப்பட்டிருக்கிறது.

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்ததாக சொல்லப்படும் பௌத்த வழிபாட்டத்தலம் நீனாகேணியின் எல்லைப் பகுதிக்கு வெளியில் அமைந்து காணப்படுகின்றது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அதற்கென சூழவுள்ள முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசங்களில் கணிசமான பகுதி தேவைப்படுவதாகவும் வலியுறுத்தும் கோரிக்கை ஒன்று இவ்வருட ஆரம்பத்தில் மக்களிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது ஒரு சர்ச்சையாக மாறிய வேளை, திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபரின் தலையீட்டுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இப்பௌத்த வழிபாட்டுத் தலத்தின் தேவைக்கென 30 ஏக்கருக்கும் அதிகமான தமது காணிப்பரப்பினை வழங்குவதற்கு இப்பிரதேச முஸ்லிம் மக்கள் முன்வந்திருந்தனர்.

தாம் நீண்டகாலமாக குடியிருந்த பிரதேசங்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தபோதிலும் கூட, சுமுகமான தீர்வினைக் காணவேண்டும் என்ற நன்நோக்கில் முஸ்லிம்கள் இதற்கு உடன்பட்டிருந்தனர்.

இவ்வாறு உடன்பாடு காணப்பட்டதன் பின்னரே இப்போது அவர்களை முற்றுமுழுதாக அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் கட்டளையினை பிரதேச செயலாளர் பிறப்பித்திருக்கிறார்.

இதற்கு சிறிது காலத்திற்கு முன்னர், நிரந்தர வீடுகளை அமைத்துத் தருவதாகக் கூறி சிலரினால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி அனுமதிப்பத்திரங்கள் பல மீளப் பெறப்பட்டிருக்கின்றன.

போட்டோ பிரதிகளை எடுக்க முடியாத சூழலில் காணி அனுமதிப்பத்திரத்தின் உண்மைப் பிரதிகளையே இப்பிரதேச ஏழை மக்கள் சம்மந்தப்பட்டோரின் நம்பிக்கையின் நிமித்தம் கையளித்திருக்கின்றனர்.

இம்மக்களுக்கு நிரந்தர வீடுகளோ அல்லது பெறப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்களோ இதுவரை வழங்கப்படவில்லை.
தம்மை இப்பிரதேசத்திலிருந்து எதிர்காலத்தில் வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட செயலாக இது இருக்கக்கூடும் என இப்பிரதேச மக்கள் சந்தேகிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

யுத்த காலத்தில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த ஏழை மக்களை இம்சைப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் ஒன்றாகவே அரச அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் பல ஏக்கர் காணிகளை அரசியல்வாதிகளும் வர்த்தக நிறுவனங்களும் வியாபார நோக்கங்களுக்காக கையகப்படுத்தியிருக்கின்ற நிலையில் இவ்வாறு ஏழை மக்கள் குடியிருக்கும் சிறு நிலப்பரப்புக்களை மாத்திரம் குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளவும் நியாயப்படுத்தவும் முடியாத ஒன்றாகும். மாத்திரமின்றி இம்மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியுமாகும்.

எனவே, தோப்பூர் நீனாகேணி மக்கள் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் இப்பிரதேசத்தில் தொடர்ந்தும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் மனிதபிமான அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விநயமாக வேண்டிக் கொள்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X