2025 மே 03, சனிக்கிழமை

ஹஜ் கோட்டா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: சுபைர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம்கள் அழிந்துகொண்டிருக்கும்போது ஹஜ் கோட்டா விவகாரத்தை பூதகாரமாக்கி அரசியலாக்க வேண்டாமென கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலம் வரும்போது இணைத்தலைமை எனக் கூறி கோட்டா பிரித்துக்கொள்வதில் முறுகல் நிலை காணப்பட்டு வருகின்றது. இந்த முறுகல் நிலையானது முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்த எடுக்கும் நடவடிக்கை என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக அமைச்சர் பௌசியின் தலைமையின் கீழ் எந்தவொரு பிரச்சினையுமின்றி ஹஜ் விவகாரம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் பௌசியின் திறமையான நடவடிக்கையால் ஹஜ் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், ஹஜ் நடவடிக்கைக்கு இணைத்தலைமை என்று எப்போது போடப்பட்டதோ அன்றிலிருந்து இந்த விவகாரம் ஒரு பிரச்சினையான விவகாரமாக மாற்றப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய சூழ்நிலையானது முஸ்லிம்கள் ஹஜ் கோட்டா விடயத்தில் அடிபட்டு பிரச்சினைப்பட்டுக்கொள்ளும் காலமல்ல.

இவ்வாறான விடயங்களுக்கு இஸ்லாம் என்ன கூறியுள்ளது. நபியவர்களின் வழிகாட்டல் என்ன என்பதை வைத்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கோட்டா எனக் கூறி நம்மை நாமே பலவீனப்படுத்த முயற்சிக்கக்கூடாது என அரசியலில் இளையவன் என்ற வகையில்  ஆலோசனை கூறி வைக்க விரும்புகின்றேன்.

இணைத்தலைமை எனக் கூறி மலையக முஸ்லிம் அரசியல் தலைமை இந்த ஹஜ் கோட்டாவை பயன்படுத்தி தனது பிரதேச மக்களுக்கும் தனது உறவுக்காரர்களுக்கும் தனது வியாபாரத்துக்கும்; பிரித்துக்கொள்வதற்கு முற்படுவதையே காணக்கூடியதாகவுள்ளது.

அப்படியானால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான நாங்களும் இதில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்கவேண்டும். ஒருபோதும் கிழக்கிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வாறு கேட்டதில்லை.

ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுக்காக இலங்கையில் இருந்து செல்பவர்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகம் பேர் செல்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு அரசியல்வாதியும் இதைக் கேட்டதில்லை.

எனவே இந்த ஹஜ் கோட்டா என்ற விடயம் நீதிமன்றம் வரை செல்வதை பார்க்கும்போது மிகவும் கவலையாகவுள்ளது.

எனவே இது விடயத்தில் முஸ்லிம் கல்விமான்கள், புத்திஜீவிகள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் முக்கியஸ்தர்கள் ஒன்றுபட்டு பிரச்சினையில்லாத தீர்வைக் காண முனையவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X