2025 மே 03, சனிக்கிழமை

இழந்த கல்வியை மீளப் பெற வேண்டும்: பொன். செல்வராசா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 21 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'இந்த நாட்டில் முன்னொரு காலத்தில் கல்வியில் கொடி கட்டிப் பறந்தவர்கள் எமது தமிழினம். ஆனால், பிற்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் எமது கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால் நாம் கல்வியில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளோம்.

இழந்த எமது கல்வியை  நாம் எதிர்காலத்தில் மீளப் பெறக்கூடியவாறு அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும்'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

வவுணதீவு விபுலாநந்தா விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  விளையாட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'பின்தாங்கிய பிரதேசங்கள் சகல விடயங்களிலும் உயர்வு காண்பதென்றால், நாம் கல்வியில் முன்னேற்ற அடைய   வேண்டும். மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள கல்வி அதிகாரிகள் அந்த வேலையைத் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நான் நம்புகின்றேன்.

எமது பிரதேசத்தில் தற்போது ஓரளவு கல்வித் தாகம் ஏற்பட்டுள்ளதை  நாம் காண்கின்றோம். 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை சித்தியை  ஓரளவுக்கு கூட்டிக்கொள்ளலாம் எனும் நோக்கில் இந்த கல்விச் சமூகம், கல்வி அதிகாரிகள் நல்ல ஆக்கபூர்வமான  நடவடிக்களை மேற்கொண்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம் நான் கலந்துரையாடியதன் படி, இந்த வலயத்தில் கல்வியில் முன்னேற்றத்தை  ஏற்படுத்துவதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி வலய நிர்வாகிகளுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தப் பிரதேசத்தில் 1சீ தரத்திலான ஒரு சில பாடசாலைகள் இருந்தாலும், 1ஏ பி தர பாடசாலைகள் மிகவும் அரிதாக காணப்படுகின்றன.  அதற்கு மேலாக 1 சீ தர பாடசாலைகள் இருந்தும் கூட  பல்கலைக்கழகம் சென்று வெளியேறும் பட்டதாரிகளின் அளவு மிக குறைவாக உள்ளது. ஆகவே அதற்கான வேலைத்திட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்தப் பிரதேசம் ஏற்கெனவே மட்டக்களப்பு வலயத்துடன் இணைந்திருந்த பிரதேசமாக இருந்தாலும், புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை நாம் அறிவோம்.

தற்போது எல்லாக் கோயில்களும் புனரமைக்கப்படுகின்றன, ஒவ்வொரு மாதமும் கும்பாபிஷேகம்  நடைபெறுகின்றது. இவையெல்லாம் சந்தோசமான விடயங்கள். இந்துசமயத்தின் எழுச்சி என்று கூட இதனை நாம் சொல்லலாம்.

அந்த எழுச்சி கல்வியிலும் வர வேண்டும். அப்போதுதான் நாம் அனைத்திலும் முன்னேற்றம் அடைய முடியும். அதாவது, நாம் கல்வியில் எழுச்சி பெற்று முன்னேற வேண்டும். வேறு எந்த வழியிலும் நாம் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியாது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X