2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யானைகளை அகற்றுவதாக உறுதி: பொன்.செல்வராசா எம்.பி.

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை பிரதேசங்களில் மக்களுக்கு சேதங்களை ஏற்படுத்திவரும் யானைகளை அப்பகுதிகளிலிருந்து அகற்றுவதற்கான  நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்துள்ளார் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற  உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்த பொன்.செல்வராசா, அங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரட்நாயக்க மற்றும் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர், திணைக்களத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இது தொடர்பில் பொன். செல்வராசா கருத்துத்  தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின்; தாக்குதல்கள் தொடர்ச்சியாக  இடம்பெறுகின்றன. இது தொடர்பில் பல கூட்டங்களும் நடத்தப்பட்டு பல முடிவுகளும் எடுக்கப்பட்டன.

அண்மையில் கூட வனஜீவராசிகள் அமைச்சர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து கூட்டங்களை நடத்தி சில தீர்மானங்களை எடுத்து  அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது. எனினும், இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. யானைகளின் தாக்குதல்கள் இடம்பெறும் பகுதியாக 08 பிரதேச செயலகங்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவற்றுக்கு 80 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பணம் இதுவரையில் மாவட்ட செயலகத்துக்கு செல்லவில்லை. இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரியபோது, திட்ட அறிக்கை வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து கிடைக்கவில்லையென தெரிவித்தார்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரட்நாயக்க மற்றும் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்திவரும் யானைகளை  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறினேன். முதல் கட்டமாக வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள யானைகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன்.

அதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் ரட்நாயக்க அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்ததுடன், யானை தாக்குதல்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X