2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தமிழர் போராடிப், போராடி தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர்'

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'தமிழ்மக்கள் போராடிப், போராடி உயிர் மற்றும் உடைமைகளை  இழந்து தற்போது நடுத்தெருவில் நிற்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பிரதி அமைச்சரும் அரசுடன் முட்டிக்கொண்டிருக்கின்ற முன்னாள் கிழக்கு முதலமைச்சரும்தான். இவர்கள் இருவரும் அவர்கள் விட்ட பிழைகளை உணர வேண்டும். அவர்கள் அவர்களின்  மனதுகளுக்குள் இருக்கின்ற அழுக்குகளை நன்கு சலவை செய்ய வேண்டும். அவர்கள் தமிழ் மக்களை நேசிக்க வேண்டும்.'

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன்  கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி சாயி பாலர் பாடசாலையின் 14ஆவது ஆண்டு விளையாட்டு விழா மட். களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில்  நேற்று வியாழக்கிழமை மாலை (07) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்குகின்ற பாலர் பாடசாலைகளில் களுவாஞ்சிக்குடி சாயி பாலர் பாடசாலை முதலிடமாகத் திகழ்கின்றது என்பதில் சந்தோஷமடைகிறேன். சிறார்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களின் நன்னடத்தை, செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளும் இடமே பாலர் பாடசாலை. இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பிள்ளைகளை இரண்டரை வயதிலிருந்து பாலர் பாடசாலைக்கு அனுப்புவார்கள். இந்த வயதுடைய சிறார்கள் படிக்கும் வயது அல்ல. படிப்பதற்கு அவர்கள் தயார்படுத்தும் வயது ஆகும்.

தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும் இந்த சாயி பாலர் பாடசாலைக்கு ஒரு நிரந்தர இடம் அமைய வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். ஒற்றுமையை இந்தச் சிறார்களின் வயதிலிருந்து கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்து, கோடிக்கணக்கான சொத்துகளை  இழந்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் இழந்து தற்போது நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் தற்போது நடைபெறுவது ஒரு ஜனநாயக ஆட்சி அல்ல. ஒரு இராணுவமயம் கொண்ட சர்வாதிகார ஆட்சியாகும் என்பதை எமது மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்.

இலங்கை அரசு வடக்கையும் கிழக்கையும் தனித்தனியே பிரித்து அரசியல் நடவடிக்கைகளும் நிர்வாகச் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன என்றாலும் கூட, 

இந்த இரண்டு மாகாணங்களிலுமுள்ள ஆளுநர்களின் செயற்பாடுகள் இராணுவச் செயற்பாடுகளாக மாற்றி இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. 

எமது மக்களை  தொடர்ந்து இன்னல்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, மத்திய அரசும் மாகாண அரசும் எமது மக்களை புறக்கணித்தும் வருகின்றன. 

இது போன்று அரச நியமனங்களிலும் கூட எமது தமிழ் மக்கள் பலவாறாகப் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள். இதுதான் ஒரு பக்கச்சார்பற்ற ஜனநாயக ஆட்சியா?

தமிழ் மக்கள் போராடிப், போராடி உயிர் மற்றும் உடைமைகளை இழந்து தற்போது நடுத்தெருவில் நிற்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பிரதி அமைச்சரும் அரசுடன் முட்டிக்கொண்டிருக்கின்ற முன்னாள் கிழக்கு முதலமைச்சரும்தான். இவர்கள் இருவரும் அவர்கள் விட்ட பிழைகளை உணர வேண்டும். அவர்கள் அவர்களின் மனதுகளுக்குள் இருக்கின்ற அழுக்குகளை நன்கு சலவை செய்ய வேண்டும். அவர்கள் தமிழ் மக்களை நேசிக்க வேண்டும்.  

அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற பிரதியமைச்சர் கூறுகின்றார். அவரோடு சேர்த்து இன்னும் இரண்டு பேர் இந்த பட்டிருப்புத் தொகுதியிலிருந்து அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு வருவார்கள் என்றால், பாரிய அபிவிருத்தி செய்யலாம் என்று கூறுகின்றார்.

கிழக்கு மாகாணசபையை தமிழ் மக்களின் ஆட்சியில்  வராமலிருப்பதற்கு காரண கர்த்தாவாக இருந்து செயற்பட்டவர் அரசுடன் முட்டிக்கொண்டிருக்கும் இந்த முன்னாள் முதலமைச்சர்தான்.  எனவே, இப்படிப்பட்டவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காகத்தான் எமது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் திகழ வேண்டும். அப்போதுதான் எமது அரசியல் அபிலாஷைகளை நாம் வென்றுவிட முடியும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X