2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பலஸ்தீன் காஸா மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எம்.அனாம்


பலஸ்தீன் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும் இஸ்ரேல் மீது ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் எனக் கோரியும் ஏறாவூர் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்றலிலிருந்து ஆரம்பமாகி ஏறாவூர் நகரசபைக்கு முன்பாக நிறைவு பெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கிழக்கு மாகாணசபை தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், பிரதேச  முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேலை கண்டிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கும் அனுப்புவதற்காக ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தால் ஏறாவூர் பிரதேச  செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவிடம் மகஜர்கள்  கையளிக்கப்பட்டன.

இந்த மகஜரை சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் உறுப்பினர்கள் கையளித்தனர்.

ஜனாதிபதிக்கான மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அண்மையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் மனிதாபிமானமுள்ள அனைவராலும் மிகவும் கண்டிக்கத்தக்க மிகவும் துக்ககரமான நிகழ்வாகும்.

தாக்குதல் நடவடிக்கையானது முஸ்லிம்களின் புனித மாதமாகிய நோன்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும்  கண்டிக்கத்தக்கதும் மதச் சுதந்திரத்தை மீறும் செயலாகவும் உள்ளது. தாக்குதலின்போது குடிமனைகள், அகதிமுகாம், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றின் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தாக்குதல் காரணமாக குழந்தைகள், பெண்கள், அப்பாவிப் பொதுமக்கள் என்ற  ரீதியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளடன், அங்கவீனர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

யுத்தநிறுத்தம் அமுலில் இருந்த நேரத்திலும்,  தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வகையில், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்கள் அனைத்து நாடுகளாலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை விடயத்தில் தமது சொந்த நலனுக்காக கைகோர்த்துச் செயற்பட்ட மேற்குலக நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை பலஸ்தீன் விடயத்தில் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை விடயத்தில் அதிகமான முஸ்லிம் நாடுகள் தங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டதை மறக்க முடியாது.  தாங்கள் முஸ்லிம் நாடுகளின் நண்பன் மட்டுமன்றி, பாலஸ்தீன்  மக்களுடன் நெருங்கிய தொடர்பையும் பேணி வந்துள்ளீர்கள். அந்த வகையில், பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்காக இலங்கை நாடு குரல் கொடுக்க வேண்டுமென விநயமாக வேண்டிக் கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பலஸ்தீன்  காஸா மக்களுக்கு ஆதரவாகவும் பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போதுள்ள யுத்தம்நிறுத்தம் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்றையதினம் கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணி இடம்பெற்றது.

கல்குடா உலமா சபையும் கல்குடா மஜ்லிசுல் சூரா சபையும் இணைந்து ஏற்பாடு செய்த அமைதிப் பேரணியும் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்னோடை, காவத்தமுனை போன்ற பிரதேசத்தில் உள்ள பதினெட்டு  ஜூம்ஆ பள்ளிவாசல்களிலிருந்து வந்த பொதுமக்கள் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடினர்.

அங்கு காஸா மக்களின் இன்றைய நிலைமை என்ற தலைப்பில் கல்குடா சூரா சபைத் தலைவர் மௌலவி ஏ.ஜி.ஹாமித் சதகா உரை நிகழ்த்தியதுடன்;, காஸா மக்களின் நிம்மதிக்காக வேண்டியும் எமது நாட்டில் அமைதிக்காக வேண்டியும் இடம்பெற்ற தூஆ பிராத்தனை கல்குடா உலமா சபை உப தலைவர் மௌலவி ஏ.எம்.சுபைர் முப்தி நடத்தினார்.

இறுதியாக காஸா மக்களுக்கு ஆதரவாகவும் பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போதுள்ள யுத்தம் நிறுத்தம் தொடர வேண்டும் என்ற மகஜரை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கும் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்குமான மகஜர்கள்  கல்குடா உலமா சபை மற்றும் கல்குடா மஜ்லிசுல் சூரா சபை உறுப்பினர்களால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபர் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் சார்பாக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் ஆகியோரிடமும்; ஒப்படைக்கப்பட்டன.

இதன்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டுக் கொடிகள் எரிக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X