2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் பா.ஜ.க. தெளிவாக உள்ளது: நஸீர் அஹமட்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


அயல் நாடான இந்தியாவை இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற பாரதிய ஜனதாக் கட்சி இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதில் தெளிவாக இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் விவசாய விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்   திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (09) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'சமீபத்தில் நாங்கள் இந்தியாவுக்குச் சென்று பாரதிய ஜனதாக் கட்சியின் செயலாளர் நாயகம் கூட்டிய மாநாட்டில் பங்குபற்றியிருந்தோம். இதன்போது,  இலங்கை முஸ்லிம்கள் பற்றிய விடயத்தில் அவர்கள்; தெளிவாக இருப்பதை நாம் அறிந்து கொண்டோம். இது எமக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான ஒரு தீவிரப்போக்கு நம் நாட்டில் இருக்கின்றது. இது ஒரு இனச் சுத்திகரிப்பைச் செய்யக்கூடிய நிலைக்கு கொண்டுசென்று விடுமோ என்ற அச்சம்;  பொதுவாக நிலவுகின்றது. இந்தச் சூழ்நிலையில் நாங்களும் ஏன் தொடர்ந்து அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றோம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.

நாங்கள் ஏன் இன்னமும் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றோம் என்பதற்கான விளக்கத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெளிவாகச் சொல்லி வருகின்றார்.

இலங்கை இனப்பிரச்சினையில் மாகாணசபைகள் அதிகாரம், 13ஆவது திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட விடயங்களில் இந்திய அரசாங்கம் தெளிவாக இருக்கின்றபோது பொறுப்பில்லாத ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் நடந்துகொள்ள மாட்டாது.

அரசை  விட்டு வெளியேறிச் சென்றால், தூரத்தில் நின்றுகொண்டு வெறுமனே கூச்சலிடுகின்ற ஒரு கட்சியாக இருக்கலாமே தவிர, வேறொன்றையும் சாதித்து விட முடியாது.

இனப் பிரச்சினைக்கான தீர்வில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றபோது,  நாங்களும் அரசாங்கத்தில் ஓரங்கமாக இருந்து காத்திரமான தீர்வுக்கு வழிகோல வேண்டும். அந்தப் பொறுப்பைச் சுமந்தவர்களாகவே முஸ்லிம் காங்கிரஸ் இன்று இருந்துகொண்டிருக்கின்றது.

சமகாலச் சூழ்நிலைகள், அரசியல் மாற்றங்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நாடே அறியும். எங்களுடைய மனங்கள் தாக்கப்பட்டு புண்படுத்தப்பட்டிருக்கின்றன.

1983 இல் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு போன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும் இன அழிப்பு தூண்டப்பட்டு விடுமோ என்ற அச்சம் இன்று முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.

சிறுபான்மை இனங்களின் மனநிலையில் இயல்பாக எழக்கூடிய அச்சத்தைப் போக்குகின்ற கடமைப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இதை  அரசாங்கம் எக்காரணம் கொண்டும் புறந்தள்ளிவிட முடியாது.

இந்த நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரம் எந்த இனத்துக்கு எதிராகவும் ஏற்படக்கூடாது. அவ்வாறு இனக்கலவரத்தை தூண்டுகின்ற காரியங்களைச் செய்கின்றவர்கள் இந்த நாட்டின் துரோகிகளாகவே இருப்பர்;.

இந்த நாடு ஏறத்தாழ 35 வருடங்கள் அனுபவித்த துன்பங்கள் போதாது என்று சொன்னால், அப்படிப்பட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆதரவளித்து கோலோச்சுபவர்கள் துரோகிகளாகவே இருக்க முடியும். ஆகவே, இவர்களை அடக்கவேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

இனப் பிரச்சினைத் தீர்வில் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்த தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம். அதேபோன்று, முஸ்லிம்களின் விடயத்திலும் தீர்வு கிட்டவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.' என்றார்

இதேவேளை, எனது அமைச்சின் கீழுள்ள சகல உயர் நிலை அதிகாரிகளையும் ஒன்றுகூட்டி சந்திப்பை ஏற்பாடு செய்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களைப பயன்படுத்தி இந்த மாகாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது பற்றி கலந்தாலோசனை நடத்தினோம்.
கிழக்கு மாகாண மக்கள் ஏன் கஷ்டத்துனேயே காலங்கழிக்க வேண்டும் என்ற விடயங்களை முதனிலைப்படுத்தி நாங்கள் ஆராய்ந்தோம்.

நிலம், நீர், எல்லாக் காலங்களிலும் விவசாயம் செய்யக் கூடிய உகந்த காலநிலை என்று எவ்வளவோ வற்றாத வளங்கள் கிழக்கிலே இருக்கின்றன.
வளங்கொழிக்கும்  இந்தக் கிழக்கு மாகாணத்தில் இனிமேலும் வேலையில்லாப் பிரச்சினை, வறுமை என்று சொல்லிக் கொண்டிருப்போமானால் இயற்கையும் நம்மை நிந்திக்கும்.

விவசாயத்தை மேற்கொள்ளும் பாரம்பரிய விவசாயிகள் எந்தளவு தொழினுட்பத்தைக் கற்றுக் கொண்டு பயனடைகின்றார்கள்? கிழக்கு மாகாணத்துக்கு  பொருத்தமான தொழில்நுட்பம் என்ன? உற்பத்தியைக் கூட்டுகின்ற விடயங்களில் எந்தளவுக்கு பொருத்தமான அறிவைப் பெற்றிருக்கின்றோம்? என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம்.

இந்தக் கலந்துரையாடல்களின் விளைவாக விவசாயத்திலும் கால்நடை வளரப்பிலும் மீன்பிடித் துறையிலும் ஏனைய உற்பத்தி சார்ந்த துறைகளிலும் எவ்வாறு இந்தக் கிழக்கு மாகாணத்தை பொருளாதாரத் தன்னிறைவு கண்ட உற்பத்திச் சந்தையாக மாற்ற முடியும் என்பது பற்றி திட்டங்களைத் தீட்டியிருக்கின்றோம்.  இதன் முடிவுகளை நாங்கள் இப்பொழுது கட்டங்கட்டமாக அமுலாக்கி வருகின்றோம்.

எங்களது செயல்முறைகளை நாங்கள் கொஞ்சமாவது மாற்ற வேண்டும். பாரம்பரியமாகப் பழக்கப்பட்டு விட்டோம் என்பதற்காக தொடர்ந்து எமக்கு வெற்றி தராத எந்தத் திட்டங்களையும் அமுல்படுத்திக் கொண்டிருக்க முடியாது.

எமது புதிய சிந்தனா முயற்சிகள் பயனளித்து வெற்றியடைவோமாக இருந்தால் கிழக்கு மாகாணம் தன்னிநிறைவு காண்பதோடு கிழக்கு மாகாணத்திலிருந்து எந்தவொரு பெண்ணும் வீட்டு வேலைக்காரியாக மத்திய கிழக்கு செல்ல வேண்டிய தேவையும் ஏற்படாது.

உண்மையாக எமது வளங்களை நாம் பயன்படுத்துவோமாக இருந்தால், கிழக்கு மாகாணத்திலுள்ள 16 இலட்சம் பேருக்கு உணவளிக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய வளங்கள் மட்டுமே போதுமானது. என்னுடைய காலத்தில் இறையருளால் இந்த சாதனை நிலைநாட்டப்படும்.

எமது விவசாய பொருளாதார உற்பத்தித் தொழிற்றுறைகள் வளர்ச்சியடைவதற்கு இன்னும் சில விடங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதுதான் சமூக ஒற்றுமை. கிழக்கிலே தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்கள் ஒற்றுமைப்பட்டு இந்தக் காரியங்களை முன்னெடுக்க வேண்டும்.
எமக்கு இடம், தொழில்நுட்பம், முதலீடு, சந்தைப்படுத்தும் வசதி எல்லாமே தேவையாகவுள்ளன. ஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக நாம் இன அடிப்படையில் சிந்திப்பதை உடனடியாக நிறுத்தி இன ஒற்றுமை பற்றியும் கூட்டு முயற்சி பற்றிச் சிந்தித்தால் கிழக்கு மாகாணமும் நாடும் முன்னேறும். முன்னொரு காலத்தில் நாங்கள் இணைந்து வாழ்ந்தவர்கள்;. பின்னாட்களிலேயே நாங்கள் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டோம்.
நாட்டில் ஏனையவர்களுக்கு இருக்கின்ற அத்தனை உரிமைகளும் கிழக்கு மாகாணத்தவர்களுக்கு உண்டு.

ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள், தீபாவளி, சித்திரைப் பெருநாள் எல்லாம் வருகிறது என்று சொன்னால் அது எல்லோருக்கும் மகிழ்ச்சியான காலகட்டமாகப் பாரக்கப்பட்ட ஒரு வரலாறு இருந்தது. ஆனால், துரதிஷ்டமாக இடையில் ஆட்சி செலுத்திய ஒரு சிலர் அதனைக் குழப்பி விட்டார்கள்.

நாங்கள் தெளிவடைய வேண்டிய முக்கியமான விடயம் இருக்கின்றது. தமிழ், முஸ்லிம் என்று பிரித்துப் பார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். முதலில் இந்த கீழ்த்தரமான சிந்தனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இந்த ஒற்றுமை இன்மை எமக்குக் கிடைக்கக் கூடிய எல்லாவற்றையும் பாதித்திருக்கின்றது.

எனவே, எமது பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வதற்கு மீண்டும் இந்த சமூக ஒற்றுமையைக் கட்டிவளர்க்க வேண்டியுள்ளது.
ஆகையினால், எனது அமைச்சின் கீழ் வரும் எந்த அபிவிருத்தித் திட்டத்திலும் நான் இதற்கு முக்கியத்துவம் வழங்குமாறு எனது அதிகாரிகளுக்குப் பணித்திருக்கின்றேன்.' என்றார்.


  Comments - 0

  • Sanoos Sunday, 10 August 2014 08:16 AM

    ஏன் எம்மால் தமிழ் கூட்டணி மாதிரி அரசியல் செய்ய முடியாது? உமக்கும் உமது தலைவருக்கும் பதவி மற்றும் பரிவாரங்கல் தேவை. ஆதலால்தான் இன்னும் அரசுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். இவற்றை மேடைகலில் சொல்வதற்கு உமக்கும் உமது தலைவருக்கும் வெட்கம் இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X