2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பிரஜைகளின் குரல் மற்றும் செயல் கலந்துரையாடல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின்  (ADP) அனுசரணையில் பிரஜைகளின் குரல் மற்றும் செயல் (Citizen voice and action)எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று (11) திங்கட்கிழமை மட்டக்களப்பு - முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் கல்வித் திட்ட இணைப்பாளர் இ. அமுதராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மட். முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம், மட். அரசடித்தீவு விக்கினேஸ்வரா வித்தியாலயம், மட். மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மட். நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள்  பாடசாலையில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதனிடமும், மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலனிடமும் முன்வைத்தனர்.

இதில் மேற்படி பாடசாலைகள் சார்பாக முன்வைக்கப்பட்ட விடயங்களாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொடர்பாடல், தொழிநுட்பம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் இன்மை, வகுப்பறை கட்டிடம் இன்மை, குடிநீர் வசதி இன்மை, பாடசாலை இடைவிலகல் உள்ளமை, பாடசாலைகளின் சுற்றுவேலிகள் இன்மை சிற்றூழியர்கள் இன்மை, தளபாடங்கள் பற்றாக்குறை  போன்ற பல குறைபாடுகள் உள்ளதாக குறித்த பாடசாலைகளின் பெற்றோர் அபிவிருத்தி சங்கத்தினர் முன்வைத்தனர்.

இது தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பாளர் கூறுகையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை இன்மை உண்மையான விடயமாக இருந்தாலும் அதனை நிரந்தரமாக நிவர்த்தி செய்யக்கூடிய வசதி எம்மிடம் தற்போது இல்லாமலுள்ளது.  புதிதாக இப்பாடங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு வருகின்ற போது முன்னுரிமை அடிப்படையில் இப்பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வழங்கமுடியும்.

அதற்கிடையில் அரசசார்பற்ற நிறுவனங்களைக் கொண்டு இப்பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்து தருவதாகவும், கட்டிடங்கள், வேலி அமைப்பு போன்ற செயற்றிட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் ஊடாக பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் இது தொடர்பாக அனைவரிடமும் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யுமாறும்  இடைவிலகலை குறைப்பதற்கான செயற்றிட்டத்தை மேற்கொள்வதற்கு வழிசெய்வதாகவும் இயலுமானவரை தம்மால் செய்யக்கூடிய சகல வேலைகளையும் இயன்றளவு செய்து தருவதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X