2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திக்காக அதிக தொகையை ஒதுக்கியது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம்: பசீர்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

கிழக்கு மாகாணத்திலும் வடக்கு மாகாணத்திலும் உள்ள மக்கள்; அரசாங்கத்துக்கு வாக்களிக்காதபோதிலும்,  வாக்குகளை  எதிர்பார்க்காமல் அதிக தொகையை  அபிவிருத்திக்காக ஒதுக்கியது தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே  என பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்கான பிரதேச அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது.  இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'அழிவடைந்த பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற நோக்கில்; எந்தவித எதிர்பார்ப்புக்களுமின்றி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 1,326 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இவர்களுக்கு அபிவிருத்தி வேலைகள் செய்யத் தேவையில்லை என்று பார்க்காமல், அழிவடைந்த பிரதேச மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற ஒரே நோக்குடனேயே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது'  என்றார்.

இந்தக் கூட்டத்தில் திவிநெகும, ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு, கிராமிய பாடசாலை அபிவிருத்தி, விசேட வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு திட்டங்கள் முன்மொழியப்பட்டு அனைத்து வேலைகளும் இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும்; அதற்கான வேலைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது பசீர் சேகுதாவூத் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.முரளீதரன், பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X