2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர், மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதால் மனித உரிமை மீறலுக்கு வழிவகுத்துள்ளது: உதயரூபன்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண கல்வி நிர்வாகத்தில் சட்ட விதிகளுக்கு முரணான பல்வேறு செயற்பாடுகள் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுவதால் இது மனித உரிமை மீறலுக்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார்.

இது தொடர்பில்  இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாணத்தில் 13ஆவது அரிசியலமைப்புக்குட்பட்ட மாகாணசபையொன்று உள்ளது. மக்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்டுள்ள கல்வி அமைச்சும் மாகாண கல்வித் திணைக்களமும் இருந்தும் சட்ட ஆட்சிக்கு முரணான செயற்பாடுகளால் நல்லரசாட்சி கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு தனது சுயாதீனத்தை இழந்துள்ளது. அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மாகாண ஆளுநரின் தலையீட்டால் சட்டவிதிகள் மீறப்படுகின்றன.

மாகாணத்தின் வரம்புக்குட்பட்ட பல பாடசாலைகளின் அதிபர்கள் கல்வி அமைச்சின் 1998ஃ23 இலக்கமிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்துக்கு முரணாக விண்ணப்பம் கோரப்படாத நிலையில் நியமிப்பு செய்யப்பட்டிருப்பதோடு, 1589ஃ30 இலக்கமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு முரணாக நியமிப்பு, இடமாற்றங்கள், பதவியுயர்வுகள் வழங்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் 2007ஃ20 இலக்கமிடப்பட்டுள்ள கல்வி அமைச்சின் தேசிய இடமாற்றக்கொள்கை வினைத்திறனாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

வருடம் முழுவதும் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெறுவதால் மாணவர்களின் சமத்துவக் கல்வி உரிமை பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் இடமாற்ற சபையால் தீர்மானிக்கப்படும் நியாயமான தீர்மானங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் மீறப்படுகின்றன.

கல்வியிலான மாகாண சட்ட ஆட்சிக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பொறுப்புக்கூறல் வேண்டும். பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்விச் செயலாளரால், இந்த அதிகாரங்கள் மீறப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் கல்வி தொடர்பான நிறுவனத் தலைவரின் மீது கல்விச் செயலாளர் ஆதிக்கம் செலுத்துவது 1987ஆம் ஆண்டு மாகாணச் சட்டத்தின் 42ஆவது இலக்கச் சட்டத்தில் கையளிக்கப்பட்ட அதிகாரத்தின் மீது இடையூறு விளைவிப்பதை தெளிவாக காட்டுவதாகவும் உள்ளது.
குறிப்பாக அதிபர், பிரதி அதிபர்கள் நியமிப்புக்கள், ஆசிரியர் இடமாற்றங்கள், 13ஆவது அரசியலமைப்புக்கு முரணாக கல்விச் செயலாளரால் மேற்கொள்ளப்படுகின்றன.

கல்குடா, பட்டிருப்பு, மேற்கு கல்வி வலயங்களில் கணித, விஞ்ஞான தொழில்நுட்ப, ஆங்கில ஆசிரியர்களுக்கு கடும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளை, கல்வியியல் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட இப்பாடத்துக்குரிய ஆசிரியர்கள் மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் நியமிக்கப்பட்டிருப்பது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணானது.

பட்டிருப்பு, மேற்கு, கல்குடா கல்வி வலயங்களில் 200 இற்கும்  மேற்பட்ட கணித, விஞ்ஞான ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதோடு ஆயிரக்கணக்கான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனால் மேற்படி கல்வி வலயங்கள் தேசிய மட்டத்தில் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரிகளை முன்னிலைப்படுத்தி தொழில் வழங்கும் நோக்குடன் கணித, விஞ்ஞான ஆசிரியர்களுக்;கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை நல்;லிணக்கத்துக்கு முரணானது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தகரக்கொட்டில்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பாகவும் இடம்பெயர்ந்த ஆசிரியர்களின் பல்வேறான பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவையில் இம்மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இம்மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை காட்டாமல் பழுகாமத்திலும் களுதாவளையிலும் 1000 பாடசாலை வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை.

தேசிய கல்வி நிறுவகம் மீபேயில் அமைந்துள்ள ஆசிரியர் தலைமைத்துவ பயிற்சி நிலையங்களில் கிழக்கு மாகாணத்தைச்  சேர்ந்த நிர்வாகிகள், போதனாசிரியர்கள் இல்லாதிருப்பதோடு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்  செயலாளர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மொழியுரிமை மீறும் செயற்பாடு நடைபெற வாய்ப்பிருக்காது.

கிழக்கு மாகாண கல்வி நிர்வாகத்தில் கல்வி நிர்வாக சேவையைச் சாராத, நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் அதிகளவு ஆதிக்கம் செலுத்துவதையும் பிரமாணக் குறிப்புக்களை மீறிச் செயற்படுவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

13ஆவது அரசியல் அமைப்பாது அதிகார பரவலாக்கத்தை  தெளிவாக வரையறுத்திருப்பினும்,  2013ஃ13ஆம் இலக்கமிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்றரிக்கையானது மாவட்ட செயலாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் கல்வி அபிவிருத்தி தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது மாகாணச் சட்டவாட்சிக்கு முரணானதாகும்.

கிழக்கு மாகாண அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரமாணக் குறிப்புகளுக்கு முரணாகவும் சுற்றுநிரூபங்களுக்கு முரணாகவும் வேலைப்பளு அதிகரித்திருப்பதாகவும் சனி, ஞாயிறு தினங்களில் செயலமர்வுகள் நடத்தப்படுவதால் தமது ஓய்வு மற்றும் சேர்ந்து வாழும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

பல ஆசிரியர்கள் வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்களின்றி, நீண்டகால சேவை புரிவதால் மகிழ்ச்சியான கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி, முரண்பாடான நிர்வாகச் சூழலில் இருக்கின்றனர். இதனால் வினைத்திறனான செயல்திறன் மிக்க திருப்தியான சேவையை வழங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பல கல்வி வலயங்கள் அரசியல்வாதிகளின் உத்தரவு மையங்களாக விளங்குகின்றன. அரசியல் நிகழ்ச்சிநிரல்களை நடத்தும் விழா மண்டபங்களாக  இவை செயல்படுவதினால் தமிழ் மொழியிலான கல்வி தேசிய மட்டத்தில் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

கல்வி வலயங்களில் நியமிப்பு செய்யப்பட்டுள்ள பதில் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், சலுகைகளை அனுபவிப்பதிலும் அச்சலுகைகளை தமது உறவினர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆசிரியர் சேவையைச் சேர்ந்த இவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள சில அதிபர்கள், ஆசிரிய ஆலோசர்கள், ஆசிரியர்கள் தமது கல்வித் தகைமையை பெறுவதற்கு சலுகைகளை பெற்ற பின், மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலையின் முகாமைத்துவ வளர்ச்சியிலும் பங்கெடுக்காமல் ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் வருமானத்தை பெறுவதில் ஆர்வம் காட்டுவதினால் வலயங்களின் கல்வி வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தமிழ்மொழியிலான செயலமர்வுகள் யாவும் வினைத்திறனற்றதாக நடத்தப்படுவதோடு பெருமளவான நிதி வீண்விரயம் செய்யப்படுகிறது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரின் தலைமையில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வலய கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் நடத்தியிருந்தமை, கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் மீது ஆதிக்கம் செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தாமதியாது நடைமுறைப்படுத்துவதற்கு 2005ஃ17 இலக்கமிடப்பட்ட நிர்வாக சுற்றரிக்கை மூலம் உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மேலும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமை நிறைவேற்றுத்துறை மற்றும் நிர்வாகத்துறை செயல்முறைகளால் மீறப்படுவதை மேலான கருத்தில் கொண்டு சட்ட ஆட்சியை மதித்து பொறுப்புக் கூறல் வேண்டும்.

மேலும் சென்ற ஆண்டு வலயங்களுக்கிடையிலான நடைபெற்ற பரீட்சை குழறுபடிகளின் நம்பகத்தன்மையற்ற செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளின் அறிக்கைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. 2010ஃ16 இலக்கமிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக உரிய நியமங்களையும் பண்புசார் தரத்தையும் மீறி 2014ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை பல வலயங்களில் நடைபெற்றுள்ளது.

இப்பரீட்சை வினாத்தாள்களின் குழறுபடிகளுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர்கள் பொறுப்புக் கூறல் வேண்டும். இப்பரீட்சை குழறுபடிகளால் மாணவர்களின் அடைவு மட்டம் மற்றும் உயர்தர மாணவர்களின் இஷற் ஸ்கோர் போன்றவற்றை கணிப்பிட முடியாமல் உள்ளது.
அத்துடன், பாடபொறுப்புகளுக்குரிய தரம் 3 ஐச் சேர்ந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதனால், வினைத்திறனற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வதிகாரிகளின் செயல்திறனற்ற செயற்பாடுகளால் தமிழ் மொழியிலான கிழக்கு மாகாண கல்வித் தரம் தேசிய மட்டத்தில் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட பெரும்பான்மையான பாடசாலைகள் கல்வியில் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளதோடு, அரசியல் நிரல்களை செயல்படுத்துவதற்காக பின் வழியால் பொருத்தமற்ற பாடசாலைகளுக்கு அதிபர்களும் பிரதி அதிபர்களும் நியமிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

மாகாண ஆளுநரின் சந்திப்பின்போது சட்ட ஆட்சிக்கான முறிவுகளை தெளிவாக சுட்டிக்காட்டியதோடு மாகாணத்தின் நல்லரசாட்சி தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் n;தரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வியல் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பு, மாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்களினால், மீறப்படுவதாகவும் உண்மையிலேயே நியாயமற்றதும் ஒரு தலைபட்ட தீர்மானங்களை இரத்துச் செய்து நாட்டின் புனிதமான அரசியலமைப்பை மேலான கருத்தில் கொண்டு சட்ட ஆட்சியை செயல்படுத்துவதற்கு கிழக்கு மாகாண கல்விச் சமூகம் பலமானதும் சக்திவாய்ந்ததுமான கட்டமைப்பொன்றை நிறுவ வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X