2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடையவில்லை: பொதுமக்கள் முறைப்பாடு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


யுத்தத்துக்கு பின்னரான மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புணானை மேற்கு மற்றும் முறுத்தானை ஆகிய கிராம சேவை பிரிவுக்குட்பட்ட பதினைந்து கிராமங்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடையவில்லை என்று அப்பகுதி மக்கள் முறையிடுகின்றனர்.

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையினருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்குமான சந்திப்பு சனிக்கிழமை (16) பொத்தானை பள்ளிவாயல் முன்றலில், சரீப் அலி ஆசிரியர் அமைப்பின் தலைவர் வை. எல் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து  கொண்ட பொதுமக்கள் இம் முறைப்பாட்டை தெரிவித்தனர்.

இக்கூட்டமானது பொத்தானை, மயிலந்தனை, புணானை, காரையடிப்பட்டி, முருங்கையடிப்பட்டி, களுவாமடு, நாவன்னாவழி, கிடச்சிமடு, மாக்குப்ப, மினுமினுத்தவெளி, அதிகாரிவில், அக்குராண, சின்ன அக்குராண, தட்டாவெளி, காஞ்சிலங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது அப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் பொதுமக்களும் ஆலயங்கள், பள்ளிவாசல், மற்றும் அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துகொண்டு தத்தமது குறைகளையும் தேவைகளையும் விபரித்தனர்.

இதன்போது கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேறிய இப்பகுதி மக்களுக்கு வீடு வசதிகள் உட்கட்டுமான வசதிகள் இது வரை எந்தத் தரப்பினராலும் ஏற்படுத்தி தரப்படவில்லை என்பதையும் நீர்பாசன திணைக்கள அதிகாரிகளின் அசமந்தபோக்கினால் குளங்கள் தூர்ந்து கிடக்கின்றன என்பதையும் வன இலாகா அதிகாரிகள் எமது குடியிருப்பு காணிகளை சுத்தம் செய்வதற்கு தடைவிதித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி கிராமங்களில் வன்செயல் காரணமாக இனப்படுகொலைகள் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன என்பதையும் அதன்காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு இது வரை மீள்குடியேற்ற உதவிகள் அரசினாலோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களினாலோ வழங்கப்படவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் குடிநீர் வசதிகள், மின்சாரம், வீதி, பாலம், பாடசாலை, அரச அலுவலகங்கள், ஆலயங்கள் போன்றவை இப்பகுதிக்கு தேவையாக உள்ளது. முறையான நீர்ப்பாசன வசதி இல்லாததால் ஏறக்குறைய 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கைவிடப்படும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன என்றும் பொதுமக்கள் முறையிட்டனர்.

இந்நிகழ்வில் பொத்தானை பள்ளிவாசல் தலைவர் அகமதுலெப்பை ஹாஜியார், இந்து ஆலய தலைவர் யோகராசா, வட்டவிதானையார் இராசலிங்கம், மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் தலைவர் கமலதாஸ், உப தலைவர் ஏ.எல்.ஜுனைட் (நளீமி), இணைப்பாளர் அன்வர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X