2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மஹாபொல உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மஹாபொல புலமைப் பரிசில் மற்றும் மாணவர் உதவிக் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இப் புலமைப் பரிசில்களைப் பெறும் மூவின மாணவர்களும் இன்று திங்கட்கிழமை (18), இம் மனுவில் கையொப்பமிட்டு அனுப்பியதாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

தற்போது பல்கலைக் கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப் பரிசில் தொகையாக  2,500 ரூபாய் வழங்கப்படுகின்றது.
மாணவர் உதவிக் கொடுப்பனவுத்  தொகையாக 2,000  ரூபாவும் வழங்கப்படுகின்றது.

இந்தக் கொடுப்பனவுகளை 5,000 ரூபாய் வரை அதிகரிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் பேரவை சமர்ப்பித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது மஹாபொல புலமைப் பரிசில் தொகையாக வழங்கப்பட்டு வரும் 2,500 ரூபாவும் மாணவர் உதவிக் கொடுப்பனவுத் தொகையான 2,000  ரூபாவும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் கல்விக்கான பொருளாதார செலவுகள் அதிகரிப்பு என்பனவற்றுக்கு ஏற்ப புலமைப் பரிசில் தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இதன் காரணமாக மகாபொல மற்றும் மாணவர் உதவிக் கொடுப்பனவுகளையும் 5,000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும். மஹாபொல மற்றும் மாணவர் உதவிக் கொடுப்பனவுகள் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் மாதத்திலிருந்து கிடைப்பதில்லை.

பெரும்பாலும் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்து 13 மாதங்கள் கடந்த பின்பே கொடுப்பனவுத் தொகை கிடைக்கிறது.

இதனால் புலமைப் பரிசில் பெறும் பல்கலைக் கழக மாணவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
எனவே, மகாபொல மற்றும் மாணவர் உதவிக் கொடுப்பனவுத் தொகையை முதல் மாதத்தின் குறித்த தினத்தில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்குவதற்கான பெற்றோரின் வருமான எல்லை பத்து வருடங்களாக மாற்றப்படாமலுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தகுதியுடைய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் தொகை கிடைக்கவில்லை.

புலமைப்பரிசில் கொடுப்பனவு தொகையை தீர்மானிக்கும் பெற்றோரின் வருமான எல்லையை உயர்த்த வேண்டும். அத்துடன் புலமைப் பரிசிலுக்கு தகுதியுடைய மாணவரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வேண்டும்.

மேற்குறித்த வேண்டுகோள்களை நிறைவேற்றும்படி கேட்டு இந்த மனுவில் மாணவர்களாகிய நாம் கையொப்பமிட்டு அனுப்புகிறோம் என அந்த வேண்டுகோள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X