2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காட்டு யானையுடன் மோதுண்டு கொழும்பு- மட்டக்களப்பு கடுகதி ரயில் தடம்புரள்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு நேர கடுகதி புகையிரதம் ஹபரண பழுகஸ்வௌ காட்டுப் பகுதியில் காட்டு யானைகளுடன்  மோதுண்டதில் தடம்புரண்டுள்ளதாக புகையிரதப் பகுதியினர் தெரிவித்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புகையிரதம் தடம் புரண்டதில் புகையிரதப் பெட்டிகளுக்கு பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை ஆயினும் என்ஜினும் இரண்டு பெட்டிகளும் தண்டவாளத்திலிருந்து விலகியுள்ளதாக பழுகஸ்வௌ புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

அதேவேளை, பயணிகளுக்கு உயிரிழப்போ படுகாயங்களோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் மோதுண்ட காட்டு யானை ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளது.

திருத்த வேலைகள் ஏற்கெனவே அரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லோயா ரயில்வே பகுதி அறிவித்துள்ளது.
புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கான புகையிரத சேவை தாமதம் அடைந்துள்ளதாக புகையிரதப் பகுதி அறிவித்துள்ளது.

சேவையை ஸ்தம்பிதமடையாது மாற்று ஏற்பாடாக நேற்றிரவு கொழும்பிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி வந்த பயணிகள் கல்லோயா விலுள்ள இழுவை என்ஜின் பொருத்தப்பட்ட பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று விபத்துக்குள்ளான புகையிரதத்தில் கொழும்பு நோக்கிச் சென்ற பயணிகளும் பழுகஸ்வௌவில் வைத்து கொழும்பு மாகோ இழுவை என்ஜின் பொருத்தப்பட்ட பெட்டிகளில் மாற்றப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புகையிரத சேவையில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இன்றைய (சனிக்கிழமை) தினம் புகையிரத சேவையில் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படக் கூடும் என்று மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் முஹம்மட் ஹில்மி தெரிவித்தார்.

வழமையாக காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் கடுகதி புகையிரதம் இன்றைய தினம் காலை 11 மணியளவிலேயே புறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X