2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகரையில் கலாசார விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய கலாசார விழா இன்று சனிக்கிழமை (06) வாகரை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ.கிரிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது, 'வாகை' சிறப்பு மலர் வெளியிடப்பட்டதோடு, 'அவலம்' 'குப்பிலாம்பு' ஆகிய குறுந் திரைப்படங்களின் இறுவெட்டுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுல நாயகி இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,

'கிராமிய மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்ததாக உள்ள கலாசார, பாரம்பரிய, பண்பாட்டு அம்சங்கள, மங்கி மறைந்து விடாது பேணிப் பாதுகாக்கவும் அவற்றை எதிர் கால சந்ததிக்கு ஒப்படைக்கவும், இத்தகைய கலாசார நிகழ்ச்சிகள் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இயற்கை மற்றும் செயற்கை இடர்களினால் எமது பாரம்பரிய கலாசார பண்பாட்டு அம்சங்கள் பாதிப்புறக் கூடாது என்பதற்காகவே நாம் முயற்சிக்கின்றோம்.

மேலும், எமது கலைஞர்கள் போற்றப்பட வேண்டியர்கள். கிராமிய மக்களின் கலைகள் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கின்றது. எனவே இந்த அம்சங்களோடு இணைந்ததாக எமது அபிவிருத்தியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்து சமூக மக்களதும் கலை பண்பாட்டு விழுமியங்களையும் வெளிக்காட்ட நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளளோம்.

எமது கலைகளை மானியமாகவோ நிவாரணமாகவோ மக்களுக்கு கொடுத்து விட முடியாது. அவை அணுவளவும் மாறாது அப்படியே அடுத்த சந்ததியினருக்கு  ஒப்படைக்க வேண்டும்.

யுத்தம், சுனாமி, பெருவெள்ளம் உட்பட எத்தனையோ இடர்களை எமது வாகரைப் பிரதேசம் எதிர் கொண்டது. ஆயினும் இடர்களுக்கு முகங்கொடுத்து எமது கலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.' என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். மௌனகுரு, சமூகத் தொடர்பு நிலையப் பணிப்பாளர் அடிகளார் எல். லெஸ்லிப் ஜெயகாந்தன் , எஸ்கோ நிறுவனப் உதவிப் பணிப்பாளர் கோதை பொன்னத்துரை உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும்  பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X