2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத் தமிழர் அடிமையாக வாழமுடியாது: பிரசாந்தன்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணத் தமிழர்கள் தொடர்ந்தும் அடிமைகளாக  வாழமுடியாது. இதற்கு தாம் அனுமதிக்கவும் முடியாதென கிழக்கு மாகாணசபையின்  முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் தாண்டவன்வெளி கிராம அலுவலகர் பிரிவில் பல்தேவைக்கட்டடத்துக்கு    நேற்று செவ்வாய்க்கிழமை  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'நாங்கள் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களை கேட்பதும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்பதுமென கிழக்கு மாகாண  தமிழ்ச் சமூகம் அல்லோலகல்லோலப்படும் நிலையில், தமிழ் ஈழம், தமிழ்த் தேசியம் எனும் வீரவசனங்களும் பத்திரிகை அறிக்கைகள் விடுவதனாலும் மாத்திரம் எதையாவது சாதிக்க முடிந்துள்ளதா?

2012ஆம் ஆண்டு, கிழக்கு மக்களே! தமிழ்த் தேசியத்துக்காக வாக்களியுங்கள் என்று கூக்குரலிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கில் அதிகபடியாக 11 ஆசனங்களை பெற்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து  02 வருடங்கள் கழித்;தன. இந்த 02 வருடங்களில் எதையாவது சாதிக்கமுடிந்ததா?

அண்மையில் கிழக்கு மாகாணசபையால் வழங்கப்பட்ட   300 பாடசாலை பணியாளர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு 154 உம் சிங்களவர்களுக்கு 79 உம் தமிழர்களுக்கு 70 உம் என வழங்கப்பட்டுள்ளன.

42 சதவீதமாக தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் விகிதாசாரப்படி பார்ப்பதானாலும் அல்லது கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கைப்படி பார்ப்பினும் தமிழர்களுக்கு 132 உம் முஸ்லிம்களுக்கு 120 உம் சிங்களவர்களுக்கு 63 உம் என்ற வகையில்; வழங்கப்படவேண்டியதே பொருத்தமானது.

ஆனால், 477 பாடசாலைகளுள்ள தமிழர்களுக்கு 70 உம் 352 பாடசாலைகளுள்ள முஸ்லிம்களுக்கு 154 நியமனமும் வழங்கப்பட்டுள்ளன என்றால், இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியமென்று வாக்களித்த மக்களையே சாரும். அதை விடுத்து கிழக்கு மாகாணசபை அமைச்சுக்களையோ, முஸ்லிம் அரசியல் தலைமைகளையோ பழி கூறமுடியாது.

எமது தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக மாத்திரம் தேர்தல் கால வீரவசனங்களும் பின்னர் எதிர்க்கட்சி ஆசனம் எடுத்துக்கொண்டு தாம் மாத்திரம் சலுகைகள் அனுபவிக்க, அப்பாவி கிழக்குத் தமிழன் அடிமையாக வேலைவாய்ப்பு முதற்கொண்டு அனைத்துக்கும்  கையேந்தும் நிலை மிகக் கொடுமையானது. அதைத் தடுத்து எம்மை நாமே ஆழ, எம்மக்களின் வலுவாக்கத்துக்காக  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் போன்ற தூர நோக்கிய சிந்தை கொண்ட தலைவர்களை எம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை  மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X