2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மதுபானக் களஞ்சியசாலை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை கிராமத்தில் புதிதாகத் திறக்கப்படவிருந்த மதுபானக் களஞ்சியசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராமவாசிகள் இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பெருந்துறையில் மதுபானக் களஞ்சியசாலையாகவும் விற்பனை நிலையமாகவும் பயன்படுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் அனுமதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தின்போது கோரப்பட்டது.

இங்கு  மதுபானம் தொடர்பான செயற்பாடுகளை முற்றாக தடுத்து நிறுத்துமாறும்; ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர்  ஆர்ப்பாட்டக்காரர்களுடன்  கலந்துரையாடினர்.

இதன்போது, மேற்படி  மதுபான களஞ்சியசாலைக் கட்டடம் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள்  நடவடிக்கை எடுக்கப்படுமென மட்டக்களப்பு மாநகரசபையின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 

இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால், தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இப்பகுதியில் எந்தவித மதுபானச் செயற்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு நடந்தால் அதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களென அங்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி டி.பி.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

திருப்பெருந்துறை முருகன் கோவிலுக்கு  முன்பாக ஒன்றுகூடிய திருப்பெருந்துறை மாதர் அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணமும் கலந்துகொண்டார். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X