2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வன்முறைகளால் சமூகத்தில் அச்சம் நிலவி வருகின்றது: ஹம்சா

Gavitha   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர்கள், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களால் சமூகத்தில் அச்சம் நிலவி வருகின்றது என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

காத்தான்குடியில் புதன்கிழமை (10) மாலை சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற் கண்டாவறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களால் சமூகத்தின் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது.

எவ்வித விபரமும் அறியாத அப்பாவிச் சிறுமி இவ்வாறு கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சம்பவம் அனைவரையும் அச்சப்பட செய்துள்ளதுடன் கவலையையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி பாடசாலைக்கல்வியிலும், மார்க்க கல்வியிலும் சிறந்து விளங்கியதுடன் சிறந்த குண இயல்புகளையும் கொண்டிருந்தார். இது தொடர்பில் எனது ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மைக்காலமாக சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேவத்தை பன்னவை பிரதேசத்தில் வசிக்கும் நான்கு வயது சிறுமியான தாமரா கேஸனி எனும் சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் ஊடகங்களின் மூலம் அறிந்துக்கொண்டோம்.

இன்றைய காலத்தில் பிள்ளைகளை பராமரித்து, பாதுகாப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலான ஒரு காரியமாக மாறிவிட்டது. மேலும் இக்கால கட்டங்களிலேயே வளர்ந்து வரும் நவநாகரிக மோகத்தினால் பல்வேறு தீய சக்திகள் குடும்பத்தின் புனிதத் தன்மையினை பாதிப்படையச் செய்கின்றன. 

பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது கேள்வி;க் குறியாகவே உள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக பிள்ளைகளுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய குடும்ப உறுப்பினர்களே பிள்ளைகளை உடல், உள ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்குவதும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை வேரோடு பிடுங்கி எறிவதும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுவதும் இன்று சமூகத்தில் நடைபெறுகின்ற சாதாரண விடயமாகின்றது.

இரண்டு தினங்களுக்கு முன் காத்தான்குடியைச் சேர்ந்த சிறுமி கொடூரமான முறையி;ல் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தையொட்டி எமது நிறுவனம் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

சட்டத்தையும், நீதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டி வருகின்ற பொலிஸார் இவ்விடயத்துக்கு துரித நடவடிக்கை எடுத்து வருவதையிட்டு திருப்தியடைகிறேன். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிராக குற்றங்களை புரிவோர் நீதிமன்றம் மூலம்  தண்டணைக்குட்படுத்த வேண்டும்.

இவ்வாறு கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலமே இனிவருகி;ன்ற இளைய சமுதாயத்தினை பாதுகாக்க முடியும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X