2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு, சிங்கள மக்களது மனமாற்றமா? சர்வதேச அழுத்தமா? காரணம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், வடிவேல் சக்திவேல்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவைத் தவிர இரு தரப்பு பேச்சு என்பதற்கு இடமே இல்லை என்ற அரசு, கூட்டமைப்பு விரும்பின் இரு தரப்பு பேச்சுக்கு அரசு தயார் என அரசு தரப்பு அமைச்சர் கூறுகின்றாரே  இதற்குக் காரணம் சிங்கள மக்களது மனமாற்றமா? சர்வதேச அழுத்தமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகணசபை உறுப்பினருமான கேவிந்தன்  கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ள கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், கேவிந்தன்  கருணாகரம் (ஜனா) வெள்ளிக்கிழமை (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"சர்வதேச அழுத்தங்களால், தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும் சிங்கள மக்களது ஆதரவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகின்றார்.

அவரது கூற்றுப்படி பார்த்தால் தமிழ் மக்களது வாழ்வுரிமை என்பது சிங்கள மக்களது விருப்பத் தேர்வு என்பதாகவே அமையும் எனக் கருதுவதாக தெரிகின்றது. சிங்கள மக்கள் தமிழ் மக்களது உண்மையான பிரச்சனையை அறிய முடியாது, உணர முடியாது, புரியந்து கொள்ள முடியாது, அரசின் இனவாதக் கருத்துக்களால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை வாசுதேவ புரிந்து கொள்ளாதது துரதிஷ்டமாகும்.

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனக் கூறும் அமைச்சர் இறுதி யுத்தம் இடம்பெற்றது முதல் கூறிய கூற்றுக்களிலிருந்து அரசாங்கம் இன்று இறங்கி வந்தமைக்கு காரணம் என்ன? 

சிங்கள மக்களது மனமாற்றம் மூலம் வந்ந அழுத்தமா அல்லது சர்வதேச அழுத்தமா? யுத்தத்தின்போது அரச படையினர் உயர்த்தப்பட்ட மனித உரிமைகளை மதித்து பூச்சிய மனித அழிவுகளுடன் யுத்தம் புரிந்தார்கள் எந்தவொரு சிவிலியனும் யுத்தத்தில் கொல்லப்படவில்லை, எந்தவொரு படைவீரனும் சாதாரண பொதுமக்களை குறிபார்க்கவில்லை.

மனிதாபிமான யுத்தத்தையே எமது அரசு புரிந்தது என்றெல்லாம் அடித்துக் கூறிய அரசு, இடையில் யுத்தம் என்றால் பொது மக்களுக்கு இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது என மழுப்பி இன்று தானாகவே யுத்தக் குற்றம் இழைக்கப்பட்டது என்பதற்காக அதனை விசாரணை செய்ய  ஆணைக்குழுவை அமைத்துள்ளது. எனின் இதற்குக் காரணம் சிங்கள மக்கள் மனமாற்றமா? சர்வதேச அழுத்தமா? நாடாளுமன்ற தெரிவுக்குழுவைத் தவிர இரு தரப்பு பேச்சு என்பதற்கு இடமே இல்லை என்ற அரசு கூட்டமைப்பு விரும்பின் இரு தரப்பு பேச்சுக்கு அரசு தயார் என அரச அமைச்சர் கூறுகின்றாரே இதற்குக் காரணம் சிங்கள மக்களது மனமாற்றமா? சர்வதேச அழுத்தமா?

தசாப்த காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த வடமாகாண சபைத்தேர்தல் கட்டாயம் நடத்தியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துக்கு அரசு வரக் காரணம தான் என்ன? இவை எதனையும் புரிந்துகொள்ளாது அல்லது புரிந்து கொண்டு புரியாதது போல, பத்தோடு பதினொன்று போல வாசுதேவ தம்பங்குக்கு குட்டையை குழப்ப ஆரம்பித்து விட்டாரோ?

வாசுதேவ அமைச்சர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் தமிழர் பிரச்சனை தொடர்பாக சிங்கள மக்கள் மனமாற்றம் பெறுவார்கள் என்பது முயற்கொம்பு. அவ்வாறு சிங்கள மக்கள் மனமாறினாலும் பேரினவாதம் அதை ஏற்றுக்கொள்ளும் என்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று இந்நிலைமையில் தமிழர் தம் பிரச்சனை தீர்க்கப்பட சர்வதேச அழுத்தம் ஒன்று ஒரே வழி என்பதே அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வாசுதேவ புரிந்துகொள்வார் என்று நினைக்கின்றேன் அவர் புரிந்து கொண்டால் சரி"  என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X