2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கல்வியை முன்னேற்ற பெற்றோர் முன்வரவேண்டும்'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை முன்னேற்றுவதற்கு பெற்றோர் முன்வர வேண்டுமென்பதுடன், கல்வியை முன்னேற்றுவதன் மூலம் குடும்பம் மட்டுமல்ல ஊர் மற்றும் பிரதேசமும்; தானாக பொருளாதார ரீதியில் அபிவிருத்தி காணும் என கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இதற்கு பெற்றோர்களாகிய உங்களின் பங்களிப்பு முக்கியம் எனவும் அவர் கூறினார்.

மீராவோடை சக்தி வித்தியாலயத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வருகைதந்து ஒலிபெருக்கிச் சாதனத்தை இவர் வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கடந்தகால போராட்டத்தால் எமது மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளனர். இதை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய பாரிய கடமை எம் எல்லோரினதும்  ஆகும். இதற்கு என் போன்றவர்களின் ஒத்துழைப்பு என்றென்றும் இருக்கும். எந்தநேரத்திலும் கல்விச் செயற்பாடுகளுக்கு  உதவுவதற்கு  நான் தயாராகவுள்ளேன். இதில் எவரும் சந்தேகமடையத் தேவையில்லை.

கிராமப்புற பாடசாலைகள், நகர்ப்புற பாடசாலைகளுக்கு  கல்வியில் சமமாக சிறந்த பெறுபேற்றை பெற முயற்சிக்க  வேண்டும்.
வணிகத்துறையில் முன்னேற்றமாக இருந்த எமது சகோதர இனம், தற்போது கல்வியிலும் எங்களை விட மிஞ்சியுள்ளனர். இதற்கு எங்களின் கவலையீனம் காரணம் அல்ல. அவர்களின் முயற்சியே காரணம். அதேபோல் நாங்களும் முயற்சிக்கவேண்டும். அதற்கேற்றாற்போன்று பாடசாலை நிர்வாகங்கள் தங்களின் சேவை நேரம் தவிர, ஏனைய நேரங்களில் பிரத்தியேக வகுப்புக்களை வைத்து எமது மாணவர்களின் கல்வியை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். இதற்கு மாணவர்கள்,  பெற்றோர் ஒத்துழைக்கவேண்டும்.

எமது பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் எனது காலடி படாத இடங்கள் இல்லை. இதற்கு மீராவோடை தமிழ் எல்லைக்கிராமமும்  விதி விலக்கல்ல.

நான் அரசியலை தொழிலாகச் செய்பவன் அல்ல. பொருளாதார ரீதியாக அரசியலுக்கு மீண்டும் வந்தவனும் அல்ல. எமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை சீர்செய்யவும் எமது இனத்தின் உரிமைக்கும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் முன்னின்று செயற்படும் முகமாக மீண்டும் அரசியல் சேவையை  வழங்க காலத்தேவையின் நிமித்தம் வந்தேன்'  என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X