2025 மே 19, திங்கட்கிழமை

'ஏறாவூர் மக்களுக்கு காணிகள் கிடைக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஏறாவூரைச் சூழவுள்ள காணிகள்,  ஏறாவூர் மக்களுக்கு கிடைக்க வழிவகை மேற்கொள்ளப்படவேண்டும் என்று கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஐயங்கேணியில் தையல் பயிற்சி நிலையத் திறப்பு விழா திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இந்த விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஏறாவூரிலுள்ள 10 ஆயிரத்துக்கு  மேற்பட்ட குடும்பங்கள் காணிப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றார்கள். ஆயினும்,  அவர்களுக்கு காணி கிடைப்பதை ஏறாவூர்பற்று பிரதேச செயலக நிர்வாக அதிகாரிகள் தடுத்துவருகின்றார்கள்.

இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமையுள்ள காணிகளை, நிர்வாக அதிகாரிகள் வெளியிலுள்ள இந்தப் பகுதியின் பூர்வீகம் அல்லாத முன்னாள் புலி  உறுப்பினர்களான அரசியல்வாதிகளுக்கு குத்தகை என்ற பெயரில் கொடுத்துள்ளார்கள். இது திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்ற ஒரு காரியமாகும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தலா பத்து ஏக்கர் காணிகளை முன்னைநாள் அரசாங்க அதிபர் ஒருவர் முறையற்ற விதத்தில்  பகிர்ந்தளித்துள்ள விடயம் இரகசியமானதொன்றல்ல. இது நிர்வாகத் துஷ்பிரயோகமாக இருக்கின்ற அதேவேளை, திட்டமிட்ட செயற்பாடுமாகும். ஆரையம்பதியில்  இருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் உறவினர்களுக்கும் ஏறாவூரில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்களுக்கும் இங்கு ஏறாவூரில் குத்தகை என்ற பெயரில் 150 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது அப்போது பதவியிலிருந்த முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் திட்டமிட்ட  நடவடிக்கையும் அதிகார துஷ்பிரயோகமுமாகும்.

இப்பகுதிகளில்  பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காண்பதற்காக காணி அமைச்சரை நான் சந்தித்தபோது அவர் அதற்கு நேரம் ஒதுக்கித் தந்துள்ளார். அப்பொழுது நீங்கள் உங்கள் பிரச்சினைகளை முன்வைக்கமுடியும். உறுகாமம் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X