Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 மார்ச் 29 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
'காத்தான்குடி நகரசபையை, ஊழல்-மோசடிகள் எதுவுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளாக தான் நிர்வகித்ததாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்து அப்பட்டமான பொய் மாத்திரமின்றி வேடிக்கையான ஒன்றுமாகும். மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற முயற்சிகளை கைவிட்டு, நகரசபையின் நடவடிக்கைகளை முழுமையான நிதிப்பரிசோதனைக்கும் தொழில்நுட்ப ஆய்வுக்கும் உட்படுத்த நகரசபை தவிசாளர் முன்வர வேண்டும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை (28) விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
'கடந்த 24.03.2015 அன்று நடைபெற்ற நகரசபை அமர்வின் போது, கருத்து தெரிவித்துள்ள தவிசாளர், காத்தான்குடி நகரில் காணப்பட்ட அதி முக்கிய பிரச்சினைகளான வடிகான் அமைப்பு, மாடு அறுக்கும் மடுவம் மற்றும் திண்மக்கழிவகற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தாம் காத்தான்குடி நகரசபையை கடந்த நான்கு ஆண்டுகளாக ஊழல்-மோசடிகளற்ற நேர்மையான சபையாக சிறப்பாக நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஊழல்-மோசடி, நேர்மை மற்றும் சிறப்பான நிர்வாகம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாததன் காரணமாகவே, நகரசபை தவிசாளர் இவ்வாறு தெரிவித்திருக்கக்கூடும். ஏனெனில் நகரசபையில் காணப்படும் ஊழல்-மோசடிகளை, நிர்வாக சீர்கேடுகளை மற்றும் நேர்மையற்ற, மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை நாம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சபை கூட்டங்களின் போது, செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் மற்றும் கூட்டறிக்கைகள் என்பன இதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன.
தற்போது பதவியில் இருக்கும் நகரசபை நிர்வாகம் ஆட்சியை பொறுப்பெடுத்து நடத்திய மிக ஆரம்பகால கூட்டங்களின்போதே தவிசாளரின் நிதி மோசடி செயற்பாடுகளை நாம் அம்பலப்படுத்தினோம். எமது ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட சபை, குறித்த நிதிக்கொடுப்பனவுகளை நிறுத்துவது என தீர்மானித்தது. இருப்பினும் இவ்வாறான நகரசபை தீர்மானங்களை மீறிய மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் தெடர்ந்தும் நடைபெற்றே வந்துள்ளன. இவ்வாறன நிதி மோசடிகளை செய்வதற்கென பயன்படுத்தப்பட்ட போலியான ஆவணங்களை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலப்படுத்தி இருக்கிறோம்.
வெளிப்படை தன்மையற்ற சபையின் போக்குகளை சுட்டிக்காட்டி இருக்கிறோம். மக்களின் நலன்களை பாதுகாக்கின்ற ஒன்றாக இருக்கும் நகரசபை, எவ்வாறு இயங்க வேண்டும் என்பதனை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
காத்தான்குடி நகரின் 35 சதவீதமான மக்களின் ஆணையை பெற்ற எமது கட்சிப்பிரதிநிதிகளின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் நிராகரித்த தவிசாளர், சபை நிர்வாகத்தில் இருந்து எம்மை பலாத்காரமாக தூரப்படுத்தினார். நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய எமது உறுப்பினர்களை நிதிக்கொடுக்கல் வாங்கல்களுடன் சம்மந்தப்பட்ட குழுக்களில் இருந்தும் நிரந்ததரமாக நீக்கினார். அதனையும் கூட, சபையால் மேற்கொள்ளப்படாத ஒரு தீர்மானத்தை திருட்டுத்தனமாக கூட்டறிக்கையில் செருகிய ஒரு நிர்வாக மோசடி மூலமாகவே நிறைவேற்றினார்.
அது போலவே காத்தான்குடி நகரின் அபிவிருத்தி நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எமது தெடர்ச்சியான கோரிக்கைளும் தவிசாளர் தலைமையில் இயங்கும் நகரசபையால் நிராகரிக்கப்பட்டன. மடுவப் பிரச்சினையை ஆராய்ந்து ஒரு விஞ்ஞான பூர்வமான தீர்வை நாம் முன்வைத்தது மாத்திரமின்றி, அதற்குரிய நிதியை பெற்று அதனை அமைத்து தந்து, அதனை குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு பராமரிப்பு செய்வதற்கும் நாம் தயார் என பகிரங்கமாகவும் சபை அமர்வுகளின் போதும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
அதுவும் நிராகரிக்கப்பட்டது. வீதி அமைப்பு முறை மற்றும் வடிகான் அமைப்பு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளையும் எமது பிரதிநிதிகள் முன்வைத்து இருந்தனர். அவையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவ்வாறு மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
இதன் விளைவு, சிதைந்து போன தரமற்ற வீதிகள், நீர் வடிந்து ஓடாத வடிகான் அமைப்புக்கள், உடைந்து நொறுங்கிக் காணப்படும் வடிகான் மூடிகள், நவீன மடுவம் என்ற பெயரில் முறைகேடாக அமைக்கப்பட்டு சீரழியும் மடுவம், அபிவிருத்தி என்ற பெயரில் செய்யப்பட்ட பாரிய வீண் விரயம், நகரசபையினால் அமைக்கப்பட்ட தரமற்ற வீதிகளை அகற்றுமாறு கோரி மக்களே போராடும் நிலை என்பன நகரசபை நிர்வாகம் எப்படிப்பட்டது என்பதற்கான ஒரு சில சாட்சியங்களாக இருக்கின்றன.
அது போலவே, திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமாயின், அது எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்ற அறிவுபூர்வமான ஆலோசனைகளை நாம் முன்வைத்தோம். அவற்றையெல்லாம் புறக்கணித்த தவிசாளர், இதற்கு உடனடித்தீர்வு பெற்றுத்தருவதாக பொய் வாக்குறுதியளித்தது, ஏமாற்றி பொது மக்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய்களை வசூலித்தார். எமது பொது நிறுவனங்களின் நற்பெயரினையும் இதற்காக பயன்படுத்திக் கொண்டார்.
திண்மக்கழிவு பிரச்சினை தீரும் என்று நம்பியிருந்த மக்கள், தீர்வு கிடைக்காத நிலையில், இன்று நகரசபைக்கெதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த மக்களை குறி வைத்து பழி வாங்கும் நடவடிக்கைகளை தவிசாளர் செய்து வருகின்றார்.
நகரசபையில் நடந்த நிதி நிர்வாக, ஊழல்-மோசடி சம்பவங்களை நிரூபிப்பதற்கு நாம் தயார் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தவிசாளர் முன்வரவேண்டும் என்றும் நாம் பகிரங்கமாகவே கோரியிருந்தோம். அந்த கோரிக்கையை இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு முறை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம். அந்த வகையில் நகரசபையால் கடந்த நான்கு ஆண்டுகளின் மேற்கொள்ளப்பட்ட சகல வேலைத்திட்டங்கள் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஒரு முழுமையான நிதிப்பரிசோதனையும் தொழில்நுட்ப ஆய்வினையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் உள்ளூhர் பொறிமுறையொன்றினூடாக, இவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மீண்டும் ஒரு முறை நகரசபை தவிசாளரிடம் பகிரங்கமாக முன்வைக்கிறோம். இது தொடர்பில் ஏற்படும் சகல செலவீனங்களையும் பொறுப்பேற்பதற்கு எமது கட்சி தயாராக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது கோரிக்கைகளை ஏற்று நகரசபையின் நடவடிக்கைகளை முழுமையான ஆய்வுக்கும் விசாரணைக்கும் உட்படுத்த உடன்படுகின்றாரா இல்லையா என்பதனை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025