2025 மே 19, திங்கட்கிழமை

யானைகளின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 30 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்குதல்களிலிருந்து  பொதுமக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை  நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் ஆராயும் விஷேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்,  கடந்த காலத்தில் இடம்பெற்ற யானைகளின் தாக்குதல்கள்  மற்றும் அவற்றினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான், வாகரை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் யானைகளின் தாக்குதல்கள் இடம்பெற்றவண்ணமுள்ளன. இந்த நிலையில், மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் நுழையும் யானைகளை பொதுமக்கள், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர், பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,   யானைகள்  மீண்டும் வராமல்  இருப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில், மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை வேலிகள் இல்லாத இடங்களில் அவ்வேலிகளை  அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.  

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில்  கடுமையான விமர்சனங்கள் இந்தக் கூட்டத்தில்  முன்வைக்கப்பட்டதுடன்,   இவர்களின் வினைத்திறன் இல்லாத செயற்பாடுகளே பொதுமக்கள் யானைகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதன்போது, எல்லைப்புறங்களில் யானை வேலிகளை அமைப்பதற்கு தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 90 மில்லியன் ரூபாய் தொடர்பில் மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸ் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதில்  அளித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டபிள்யூ.ஆர்.வீரசேகர, இந்த நிதி தொடர்பான பதிவுகள் எதுவும் தமது திணைக்களத்தில் இல்லை என்பதுடன், அக்காலப்பகுதியில் தான் கடமையாற்றவில்லை கூறினார்.

இந்த நிலையில், மேற்படி நிதி தொடர்பில்; இரு வாரங்களினுள் விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை, வனஜீவராசி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டபிள்யூ.ஆர்.வீரசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X