2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கல்குடாத்தொகுதியில் நீர்விநியோகத் திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனை, கல்குடா ஆகிய பிரதேசங்களுக்கான நீர்வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்த நீர் வழங்கல் திட்டத்தின்; முதற்கட்டப் பணிகளை ஓட்டமாவடி – மாவடிச்சேனையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் முதற்கட்டம் ஆறு மாதங்களில் நிறைவடையவுள்ளது.

முதற்கட்ட வேலைகளுக்கு 127 மில்லியன் ரூபாய் செலவாவதோடு, 12 மாதங்களில் முடிவடையவுள்ள இரண்டாம் கட்ட வேலைகளுக்கு 590 மில்லியன் ரூபாய் செலவாகும்.

முதற்கட்டமாக, உடனடியாக பிரதான நீர் குழாய்களை நிலத்தின் கீழ் பதிப்பதன் மூலம் தற்பொழுது செங்கலடியில் அமைந்துள்ள தாங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நீர் விநியோகம், ஓட்டமாவடி – திருகோணமலை பிரதான வீதிக்கூடாக ஓட்டமாவடி பாலம் வரை நீடிக்கப்படும். இதனால் இப்பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் என்பன சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இரண்டாம் கட்டமாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, கல்குடா ஆகியவற்றின் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கியதாக கிளை நீர்க்குழாய்களை பதிப்பதன் ஊடாக அனைத்து வீடுகள், கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் என்பனவற்றுக்கு  நீரிணைப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இதற்காக சித்தாண்டியில் பிரத்தியேகமான நீர்த்தாங்கி, நீர் உந்து நிலையம் என்பன அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

இவற்றின் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பயனடையவுள்ளனர். ஏறத்தாழ எட்டாயிரம் இணைப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, சிப்லி பாறுக், சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.முபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில்;, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு பிராந்திய பிரதி பொதுமுகாமையாளர் யூ.எல்.ரத்னபால உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X