2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முரண்படாதவாறு காத்தான்குடி நூதனசாலை அமையவேண்டுமென வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இஸ்லாமிய வரையறைகளுக்கு முரண்படாத வகையில் காத்தான்குடி நூதனசாலை அமையப் பெறவேண்டும் என்று  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது,  

'இஸ்லாத்துக்கு  முரண்படாத வகையில், சமூக நோக்கத்தை நிறைவுசெய்யத்தக்க ஒன்றாக காத்தான்குடி நூதனசாலையை அமைப்பதற்கு  ஒத்துழைக்கவேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் கலாசார வரலாற்று தடயங்களை பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காக  காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் நூதனசாலை தொடர்பில் பல நூறு வருடங்களாக இலங்கையில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் கலாசார பாரம்பரியங்களையும் வரலாற்று தடயங்களையும் ஆவணப்படுத்துவதும் பாதுகாப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

அவ்வாறான நோக்கத்துக்காக  முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் நூதனசாலை வரவேற்கப்படவேண்டிய ஒரு வேலைத்திட்டமாகும். எனினும்,  முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும் இந்த நூதனசாலையில் முஸ்லிம்களின் வரலாறும் கலாசார பாரம்பரியங்களும் காட்சிப்படுத்தப்படும் விதம் இஸ்லாமிய வரையறைகளுக்கு முரண்படாத வகையில் இருத்தல் வேண்டும்.

அந்த வகையில், அமைக்கப்பட்டுவரும் இந்த நூதனசாலையில் முஸ்லிம்களின் வரலாற்றை காட்சிப்படுத்தும் பொருட்டு பல உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுவருவதாக நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி ஆராய்ந்துள்ள காத்தான்குடி உலமாக்களும் தஃவா அமைப்புக்களும் இவ்வாறு உருவச்சிலைகள் அமைத்தல் என்பது இஸ்லாத்துக்கு விரோதமான ஹறாமான செயற்பாடு என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள். குறித்த நூதனசாலையிலிருந்து இந்த சிலைகள் அகற்றப்படவேண்டும் எனவும் மிகத்தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்கள்.

இருப்பினும்,  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன்,  தொடர்ந்தும் உருவச்சிலைகளை அமைக்கின்ற விடயத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிகின்றது. மாத்திரமன்றி, இது தொடர்பில் தெளிவான மார்க்கக் கருத்துக்களை சொல்லும் உலமாக்களுக்கும் தஃவா அமைப்புக்களுக்கும் அழுத்தம் கொடுத்து அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளையும் அவர் மறைமுகமாக மேற்கொண்டு வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

சமூக அரசியல் விவகாரங்களில் இஸ்லாமிய ரீதியான வழிகாட்டுதல்களையும் தீர்ப்புக்களையும் சொல்லுகின்ற உரிமை உலமாக்களுக்கு மாத்திரமே உரியது. உலமாக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கின்ற நிலைமையை  உறுதி செய்யப்படவேண்டியது. எல்லோருடைய கடமையுமாகும். இதுபோன்ற விடயங்களில் உலமாக்களின் கருத்துக்களை மாற்றியமைப்பதற்கோ அல்லது மலினப்படுத்துவதற்கோ எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிக்கப்படலாகாது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப சமூக அரசியல் விடயங்களில் இஸ்லாமிய மார்க்க வரையறைகள் திரிபுபடுத்தப்படுகின்ற, மீறப்படுகின்றன அபாய நிலை தோன்றும்.

அந்த வகையில், குறித்த நூதனசாலையில் சிலைகளை அமைக்கும் விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டுதல்களை நிராகரித்து மார்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை மார்க்கத்தைத் தெளிவாகச் சொல்லுவதற்குரிய உலமாக்களின் சுதந்திரத்தை நசுக்க முயலும் அவரது நடவடிக்கைளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எனவே, குறித்த நூதனசாலை அமைப்பு விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டல்களை மதித்து மார்க்கத்துக்கு விரோதமான அம்சங்களை அகற்றி இஸ்லாத்துக்கு  முரண்படாத வகையில் சமூக நோக்கத்தை நிறைவு செய்யத்தக்க ஒரு நூதனசாலையாக அதனை அமைப்பதற்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X