2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பூர்வீகக்காணிகள் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்: ஷிப்லி பாறூக்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீகக் காணிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்  தெரிவித்தார்.

இது தொடர்பில்  இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அண்மைக்காலமாக மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீகக் காணிகள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கையாளப்படுவதை எங்களால் அவதானிக்க முடிகின்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   சிகரம் பிரதேசத்தில் அமைந்துள்ள நூறு ஆண்டுகளுக்கு மேலான முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீகக் காணியில் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை அமைப்பதற்கு முயல்கின்றபோது, ஆரம்பத்திலேயே எந்த அடிப்படையும் இல்லாமல்  இதனை அரச காணியென்று ஒருசாரார் வாதிட்டனர்.

இதன் பின்னர் அக்காணி தனியாருக்குச் சொந்தமான காணியென உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அக்காணியில் கட்டட நிர்மாணத்துக்குரிய அனுமதி மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளரினால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வேளையில் இந்த இடத்தில் பூர்வீக  உலக நாச்சியார் வாழ்ந்த அரண்மனை இருப்பதாகவும் அதனால், கட்டட வேலைகளை நிறுத்துமாறு கூறி குறுக்கு வழியில் தடுக்க முயன்றனர்.

இருந்தபோதிலும், இதனை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியை  அடையாளப்படுத்தி அந்த இடம் தவிர்ந்த மற்றைய இடங்களில் நிர்மாணப் பணிகளை தொடர்வதற்கு அனுமதியளித்தது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகளும் அவர்களுடைய அடிவருடிகளும் தங்களுடைய அற்ப அரசியல் பிழைப்புக்காக இன்னுமோர் சமூகத்தின் உரிமையை பறிக்க முயல்வது வெட்கித் தலைகுனிய வைக்கும் விடயமாகும்.

இவற்றை நோக்கும்போது கிட்டத்தட்ட 30 சதவீதமான முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற மண்முனைப்பற்று பிரதேசத்திலிருந்து முஸ்லிம் மக்களை இனச் சுத்திகரிப்புச் செய்து விரட்டுகின்ற ஒரு செயல் செயற்படுத்தப்பட்டுகொண்டிருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது.

மண்முனை பாலத்துக்கு அருகிலுள்ள காணி, சிறிய சந்தைக் கட்டடம் அமைந்துள்ள காணி  மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முன்னொரு காலத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். இவ்வாறு நன்கொடை வழங்கியவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள், அவர்களது பூர்வீகக் காணிகளை பராமரிக்க முன்வருகின்றபோது அவைகளை அரச காணியென்று கூறி தடை விதிப்பது முஸ்லிம் மக்கள் மீதான உச்சக்கட்ட  அடாவடித்தனத்தை  காட்டுகின்றது.
பொதுவாகவே மண்முனைப்பற்று பிரதேச முஸ்லிம்கள் எல்லா வகையிலும் அடக்கியொடுக்கப்படுகின்ற ஒரு நிலமைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு மிக்க அதிகாரிகளும் உண்மைக்குப் புறம்பாக செயற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினைகளை இழுத்தடித்து கொண்டு செல்லாமல் மிக விரைவாக இதற்கான  தீர்வை பெறவேண்டி கட்டாய கடமை இப்பொழுது ஏற்பட்டுள்ளது'  எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X