2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நான் ஆளும் கட்சியில் உள்ளேனா? எதிர்க்கட்சியில் உள்ளேனா?: சந்திரகாந்தன்

Thipaan   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில்,  நான் ஆளும் கட்சியில் உள்ளேனா, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடையமாகவுள்ளது என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான அதி நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய உடற்பயிற்சி நிலையம் மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எங்களால் முடிந்தவரையில் நாங்கள் எங்கள் சமூகத்துக்கு பணியாற்றியுள்ளோம். இந்த கழகத்துக்கு நிதிவழங்கியது தேர்தல் காலத்தில் என்பதால், அது தொடர்பில் சில தெளிவுகள் இல்லா நிலையிருக்கின்றது.

அதனை கணக்காய்வுகள் மூலம் தெளிவுபெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பில் வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் நாங்கள் அஞ்சத்தேவையில்லை.

வளர்ச்சியடைந்த நாடுகள், சுகாதார துறைக்கு நிதியொதுக்குவதை விட விளையாட்டுத்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடுசெய்கின்றன.

ஆனால், ஆசிய நாடுகள் விளையாட்டுத்துறைக்கு மிக குறைந்தளவிலேயே நிதி ஒதுக்கீடுசெய்கின்றன. இதுபெரும் குறைபாடாகவே இருக்கின்றது.

விளையாட்டுத்துறைக்கான நிதியை அதிகரித்தால் நோயாளிகளின் தொகையினை குறைக்கலாம். அதனைச்செய்வது கடினமான விடயமாக மாறியுள்ளது.

குறிப்பாக தேசிய மாகாண அமைச்சுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் இன்று நான் ஆளும் கட்சியில் உள்ளேனா, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடயமாகவுள்ளது.

தேசிய அரசாங்கம் என்றால் அதில் நானும் ஒரு பிரதிநிதியாகும். பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

நாங்கள் பட்ட கஸ்டங்கள் போல் அல்லாமல் எமது எதிர்கால சந்ததியை வளர்ப்பதற்கு நாங்கள் பேதங்களை மறந்து, தனிப்பட்ட விமர்சனங்களை தாண்டி அனைவரும் இயங்கி பலமான சமூக கட்டமைப்பினை உருவாக்குவதற்கு சமூகமும் நாமும் இணைந்து பயணிப்போம்.

இந்த கழகம் மனச்சோர்வடையாமல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து தற்போதுள்ள கூட்டுப்பொறுப்பு போன்ற இயங்குமுறை தொடர்ந்து இயங்கும்போது நாங்கள் வெற்றிபெறமுடியும் என்றார்.

சோட்டாக்கன் கராத்தே  கழகத்தின் தலைவர் கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஆர்.தர்மரெட்னம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X