2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விருதளிப்பு விழாவுக்கு செல்ல கிழக்கு கல்விப் பணிப்பாளருக்கு அனுமதி மறுப்பு

Kanagaraj   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் சனிக்கிழமை (11) நடாத்திய விருதளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த தனக்கு அவ்விழாவுக்கு செல்வதற்குரிய அனுமதியை வழங்க கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் மறுத்துள்ளார் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடப்பில் மேலும் மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தொலை நகல் மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. 

தங்கள் சங்கத்தினால் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில்  2015.04.11 ஆம் ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறும் விருதளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக வருகைதர சம்மதம் தெரிவித்திருந்தேன். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நான்கு துறைகளில் முதன் நிலை பெற்ற மாணவர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் முதல் மூன்று இடங்கைளபை பெற்ற மாணவர்களையும், க.பொ.த சாதாரணத் தரப்பரீட்சையில் சித்த பெற்ற மாணவர்களையும், ஏனைய இதர செயற்பாடுகளில் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் இவ்வைபவத்தில் என்னை பிரதம அதிதியாக அழைத்து அச்சாதனை படைத்த மாணவர்களுக்கு எனது கைகளால்  பரிசளிக்கும் பாக்கியத்தை வழங்கியமைக்காக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். 

எனினும், இம்முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் நான் கலந்து கொள்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் மறுத்துள்ளதால் இவ்வரலாற்று முக்கியத்துவம் மிக்க வைபவத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாமையையிட்டு நான் கவலைடைகின்றேன்.  

மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கைகளினால் பரிசு வாங்கக் காத்திருக்கும் சாதனை படைத்த மாணவர்களிடம் நான் மன்னிப்புக் கோருவதாக அறிவிக்குமாறு வேண்டுகிறேன். என அக்கடித்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் செயலகம், கல்வியமைச்சர், பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X