2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இனிமேல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தீர்மானிக்கும் சக்தியாக த.தே.கூ.

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

இனிவரும் அரசாங்கத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த எந்தக் கட்சியாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது. அன்று அதை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் வலுவாக்கவேண்டும் என்று கூட்டமைப்பின்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுமக்கள் தொடர்பகம் திறப்பு விழா, மட்டக்களப்பு நகரில் நேற்று சனிக்கிழமை  மாலை நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல துன்பங்களை சந்தித்தது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு பாலமாக அமைந்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் சக்தியாக உருவாகியுள்ளது.

அந்தவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  தக்கவைப்பதற்காக தங்களின் உயிரை, தங்களின் குடும்பங்களை,  எதிர்கால வாழ்க்கையை துச்சம் என்று எண்ணியவர்களே   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சுமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலையில் சுமந்துகொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ள சூழ்நிலையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த அரசாங்கத்துடன் பேசுகின்ற, பேசி முடித்த, பேசி முறிந்த சந்தர்ப்பங்களும் இருந்தன.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  விமர்சிப்பதற்கு பலர் முளைத்துள்ளனர். ஒரு சிலரின் விமர்சனங்கள் தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பலவீனம் அடையச்செய்யாது. தனிப்பட்டவர்களின் கருத்துகளை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை  விமர்சிக்கின்றவர்கள் இன்று மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக களம் அமைக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  வைத்து நாங்கள் விலை பேசுவதற்கு எண்ணியிருந்தால், தமிழ் மக்களை விலை பேசியிருந்தால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாங்கள் இராஜபோக வாழ்க்கை வாழ்ந்திருப்போம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும்  சோரம் போனதில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .