2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கொழும்பில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வைத்து  சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம் மற்றும் மட்டக்களப்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,  விசாரணையின் அவசியத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளும் வலியுறுத்தவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் படுகொலைசெய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதேபோன்று மற்றுமொரு ஊடகவியலாளர் நடேசனும்  படுகொலைசெய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் இதுவரையில்  பூர்வாங்க விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த இரு ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறிக்கொண்டிருந்தாலும் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பலர் இந்த நாட்டினை விட்டு வெளியேறிச்செல்லும் சூழல் ஏற்பட்டது. அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக அதிகளவான ஊடகவியலாளர்கள் வெளியேறிச்சென்றனர்.

அவ்வாறு வெளியேறிச்சென்ற ஊடகவியலாளர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான எந்தவிதமான நடவடிக்கையினையும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென்பதும் கவலைக்குரியதாகவே உள்ளது.

வெளியேறிச்சென்ற ஊடகவியலாளர்கள் இந்த நாட்டுக்கு திரும்பிவரும் சூழ்நிலையேற்படவேண்டுமானால் இங்கு ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டது மற்றும் அச்சுறுத்தல் செய்யப்பட்டது தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும். அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

இதேபோன்று ஊடகவியலாளர் சுகிர்தகுமார் திருகோணமலையில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

எனவே, தமிழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் உயர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று ஊடகவியலாளர் த.சிவராம் நினைவு கூறப்படும் இந்த வேளையில், அரசாங்கத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரி நிற்கின்றது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .